Back
artical-details

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை கதிகலங்க வைத்த மழை

  • date : 2023-12-24
  • Category : Disaster

சிரபுஞ்சிக்கே சவால் விட்ட காயல்பட்டினம்: இந்திய வரலாற்றில் இடம் பெறுகிறது நெல்லை தூத்துக்குடி பெருமழை 

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி சீமை ஆகும். தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் அமையபெற்றுள்ளது. இந்த அழகான மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையால் உருக்குலைந்து விட்டது . நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பதிவான பெருமழை குறித்து இந்த பதிவில் காணலாம்.

டிசம்பர் 14 ம்தேதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல்பகுதிகளில்   நிலவிய காற்று சுழற்சி டிசம்பர் 16 ம்தேதி படிப்படியாக குமரி கடல் நோக்கி நகர்ந்தது. டிசம்பர் 16 ம்தேதி பகலில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. டிசம்பர் 17 ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 190 மிமீ மழை பதிவானது. 

டிசம்பர் 17 ம்தேதி காற்று சுழற்சியானது குமரி கடலில் நிலைகொண்டிருந்தது . மேலும் மழையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. பகலிலே இருள் சூழ்ந்து விட்டது. குமரி கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ச்சியான மேகங்கள் உருவாகி கொண்டே இருந்தது இம்மேகங்கள் அனைத்து தென் கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்தது .முதலில் மழையானது குமரி மற்றும் நெல்லை கடலோரங்களில் துவங்கியது. குறிப்பாக டிசம்பர் 17 ம்தேதி காலையிலே உவரி கூடன்குளம் செட்டிக்குளம் கன்னியாகுமரி ஆகிய பகுதியில் மழை கொட்ட துவங்கியது. 

நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்ட நிர்வாகங்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை யை மழையின் அளவை பதிவு செய்து கொண்டே இருந்தார்கள் எனவே மழையின் தீவிரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது தமிழக மக்களுக்கும் வானிலை ஆராய்ச்சியாளருக்கும் தெரிய துவங்கியது. 

தூத்துக்குடி மாவட்ட பெருமழை : தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை டிசம்பர் 17 காலை 8.30 மணி  முதல் மாலை 6 மணி நிலவரப்படி சாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் மிக கனமழை பதிவாகியிருந்தது. ஆனால் ஒரு அதீத பெருமழை என்று சொல்லும் அளவுக்கு பகல் நேரத்தில் மழை தீவிரம் இல்லை 

மழையின் கோரப்பிடியில் தூத்துக்குடி மாவட்டம் : 

மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையின் தீவிரம் பன்மடங்கு அதிகரித்தது. மக்கள் இந்த மழையை பார்த்து மிரள தொடங்கி விட்டார்கள் காரணம் குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது போல திருச்செந்தூர் காயல்பட்டினம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் மழை கொட்டியுள்ளது.மாலை 6 மணி முதல் இரவு 2.30 மணிக்குள் அதாவது 8 மணி நேரத்தில் காயல்பட்டினம் பகுதியில் 721 மிமீ மழையும் திருச்செந்தூர் 484 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையை பொதுமக்கள் எதிர்கொண்டது மிக சவாலாக இருந்திருக்கும் ஏனெனில் கற்பனையிலும் நினைத்த பார்க்க முடியாத அளவுக்கு பெருமழை பெய்திருக்கிறது. குறிப்பாக இரவு 9 மணி முதல் 10.30 மணி நிலவரப்படி ஒன்றரை மணி நேரத்தில் காயல்பட்டினம் 230 மிமீ மிக தீவிரமான மழையை பெற்றிருக்கிறது இம்மழை அளவை பார்க்கும் போது இதயமெல்லாம் படபடக்கிறது. 

டிசம்பர் 18 ம்தேதி காலை நிலவரப்படி தமிழகத்தின் நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் 12 இடங்களில் 40 செமீக்கு மேல் மழை பதிவாகியிருந்தது. குறிப்பாக காயல்பட்டினம் 946 மிமீ மழை பெய்து இந்தியாவையை அதிர வைத்து விட்டது. திருச்செந்தூர் 689 மிமீ மழையும் மூலக்கரைப்பட்டி 615 மிமீ மழையும் பதிவாகியிருந்தது. அன்றைய காலை தென் மாவட்ட மக்களுக்கு பெரும் சோகம் காத்திருந்தது 

தொலை தொடர்பு மின்சார வசதி எல்லாமே துண்டிக்கப்பட்டு விட்டது. ஒரு சாதாரண வளிமண்டல சுழற்சி இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தென் மாவட்ட மக்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து இரண்டு மாவட்டங்களையும் நிலைக்குலையச் செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளம் கரைப்புரண்டு ஓடி பல கிராமங்களையும், குடியிருப்புகளையும் மழை நீர் மூழ்கடித்துள்ளது.
தாமிரபரணி ஆறு மற்றும் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மொத்த மாவட்டத்தையும் சூழ்ந்து விட்டது .நெல்லை தூத்துக்குடி  மாவட்டத்துக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து யாருமே வர முடியாத நிலை நிலை நீடித்தது. தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்புப் பணி நடைபெற்ற நிலையில் சில இடங்களில் மீட்பு படையினரே உள்ளே செல்ல முடியாத நிலையில் இருந்தது. கருங்குளம் பகுதியில் மீட்பு படையினரே வெள்ளம் இழுத்து சென்றதையும் பார்த்து கண் கலங்கியது.

தாமிரபரணி கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. ராணுவம், விமானப் படை, கடலோர காவல் படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, காவல் துறையில் பயிற்சி பெற்ற மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரம் பெற்றது. இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. பொதுபோக்குவரத்தும் முற்றிலும் முடங்கிய நிலையில் டிசம்பர் 18 ம்தேதி மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு அரசு பொதுவிடுமுறையை அறிவித்தது.

தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது என்றே அறிந்து கொள்ள முடியவில்லை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் பரிதவித்தனர் பல நூற்றுகணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மனித உயிர்களும் இழப்பு ஏற்பட்டது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .நெல்லை, தூத்துக்குடியில் தற்போது கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு 1923-ம் ஆண்டில் அதே நாளில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் பெரும் வெள்ளபாதிப்பு துயரம் ஏற்பட்டிருக்கிறது .

டிசம்பர் 17 ம்தேதி பெருமழையின் போது  இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது.இதை கண்டறிந்து ரயில் நிறுத்தப்பட்டது நல்ல வேளை மற்றொரு தனுஷ்கோடி சம்பவம் நடைபெறவில்லை. 2 நாட்களாக பொதுமக்கள் ரயிலிலே சிக்கி தவித்தனர். சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடித்து வரும் நிலையில், மாநில மற்றும் மத்திய அரசுகள் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களை மீட்டனர். 

இந்திய வரலாற்றில் பதிவான காயல்பட்டினம் 

காயல்பட்டினம் திருச்செந்தூர் பகுதியை பொறுத்தவரை மழை மிக தீவிரமாக குற்றால அருவிகளில் நீர் கொட்டுவது போல கற்பனைக்கும் எட்ட முடியாத அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு இந்தியாவில் எந்த கடலோரத்திலும் இப்படியொரு பெருமழை பதிவானது இல்லை. ஜூலை 26,2005 ஆம் ஆண்டு மும்பையில் 944 மிமீ மழை பதிவாகியிருந்தது தற்போது அந்த மழை சாதனையும் முறியடித்து காயல்பட்டினம் 946 மிமீ மழையை பெற்றிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலே குறிப்பிட்ட படி டிசம்பர் 17 ம்தேதி மாலை 6 மணி முதல் இரவு 2.30 மணிக்குள் அதாவது 8 மணி நேரத்தில் காயல்பட்டினம் பகுதியில் 721 மிமீ மழையும் திருச்செந்தூர் 484 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. 

சிரபுஞ்சி மௌசின்ராம் 

உலகிலேயே மிக அதிகமழை பெறும் பகுதி மேகாலாயா மாநிலம் சிரபுஞ்சியை அடுத்த மௌசின்ராம் ஆகும். ஜூன் 16,2022 அன்று மௌசின்ராம் பகுதியில் 1003 மிமீ மழை பதிவாகியுள்ளது. சிரபுஞ்சி 972 மிமீ மழை பதிவானது. தற்போது தமிழ்நாட்டில் காயல்பட்டினம் 946 மிமீ மழை பதிவாகியுள்ளது. எனவே காயல்பட்டினம் தமிழக வரலாற்றில் மட்டும் இல்லை இந்திய வரலாற்றிலும் இடம் பிடிக்கிறது. 

மாஞ்சோலையை எதிர்த்த காயல்பட்டினம் 

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மிக அதிகமழை பெறும் பகுதி மாஞ்சோலை.  ஆனால் டிசம்பர் மாத இந்திய வரலாற்றில் காயல்பட்டினம் மழையே மிக உச்சகட்ட மழையாகும். டிசம்பர் மாத வரலாற்றில் இந்தியாவில் எந்த ஒரு பகுதியும் 946 மிமீ மழை பதிவான வரலாறே கிடையாது. 

கவலைக்குரிய தகவல். 

தமிழகத்தில் 1400 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதை இந்த பருவமழைக்கு முன்பே அமைத்திருந்தால் நமக்கு மேலும் ஆச்சர்யமூட்டும் வகையில் பல மழை அளவுகள் கிடைக்கப்பெற்றிருக்கும். குறு வட்டங்கள் வரை மழை அளவுகள் துல்லியமாக கிடைக்கப்பெற்றிருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி வரை உள்ள பகுதிகளில் மழை கோரதாண்டவம் ஆடியுள்ளது. காயல்பட்டினத்திற்கு பிறகு தூத்துக்குடியில் தான் மழைமானி உள்ளது.அதே போல நெல்லை கடலோர பகுதிகளில் எங்குமே மழைமானி இல்லை எனவே இந்த பகுதியிலும் எந்தளவு மழை பதிவானது என்பது தெரியவில்லை.

காயல்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலோர பகுதியில் எங்குமே மழைமானி இல்லை. மழைமானி இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. புன்னகாயல் ஆத்தூர் பகுதியில் மழைமானி வைத்து மழைஅளவு எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் 1300 மிமீக்கு மேல் இருந்திருக்கும் என்பதை நான்  உறுதியாக சொல்கிறேன் .

மழை இல்லை என்று பொதுமக்கள் வருத்தப்பட வேண்டாம். நாம்  வறட்சியை சந்திக்கிறோம்  என்றால் பின்னொரு நாளில் அதிக மழையை சந்திக்க போகிறோம் என்று அர்த்தம் இதுவே இயற்கையின் சமநிலை இயற்கையை பொறுத்தவரை எந்த ஒரு பகுதியும் நிரந்தர வறட்சி பகுதியும் கிடையாது .நிரந்தர மழைப்பகுதியும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.இது நமது வானிலை பக்கத்தில் அடிக்கடி நான் சொல்ல கூடிய வார்த்தைகள்.

எது எப்படியோ தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பதிவான மழை சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 1963 1992 ஆம் ஆண்டு  பெய்த உச்சகட்ட மழையை நான் உங்களுக்கு எப்படி தெரிவிக்கிறேனோ அதேபோல அடுத்து வரும் தலைமுறையினர்   2023 மழை குறித்து கட்டுரை எழுதுவார்கள். நமது கண்முன்னே ஒரு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் போது இதயம்  படபடக்கிறது 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், வாழ்வையே புரட்டிபோட்ட பெருமழை பாதிப்புகளில் இருந்து மக்களால் மட்டும் மீள முடியவில்லை. 
மிகுந்த வருத்தத்துடன் இப்பதிவை எழுதியுள்னேன். வரலாற்றில் இதையும் கடந்து செல்வோம். தூத்துக்குடி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திப்போம். 

-Tenkasi Weatherman

Write Reviews

0 reviews