எல்லா ஊரிலும் மழை பெய்கிறது எங்கள் ஊரில் மட்டும் மழை பெய்யவில்லை என்று நினைப்பவர்களுக்கான பதிவு:
மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றி பொதுவாக எவரும் நினைப்பதில்லை. தமிழகம் போன்ற ஒரு பகுதியில் ஓராண்டின் நான்கு பருவகாலங்களிலும் மழை பெய்யும். எனவே மழை ஏற்பட பல காரணங்கள் உண்டு.
சிலர் வானிலை அறிவிப்பு வெளியிட்ட உடனே மழை பெய்யும் என்று பார்க்கிறீர்கள். அப்படி எதிர்பார்க்க கூடாது. வானிலை அறிவிப்பு 24 மணி நேரத்திற்கு பொருந்தும்.
வெப்பசலன மழை பெய்யும் காலங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை இரவு நேரங்களில்தான் மழை பெய்யும்.
கோடைகால மழையின் சிறப்பு :
கோடைகாலத்தின் போது காலையில் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் அதன்பின்னர் மேகங்களானது நகர்ந்து உட்பகுதிக்கு மழையை கொடுக்கும். நண்பகல் வேளையில் தான் உள் மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கும்.
மாலை இரவு நேரங்களில் மட்டுமே மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும். இதுதான் கோடைகால மழையின் சிறப்பு.
கோடைகால மழையின் போது தரைக்காற்று அதிகமாக வீசுவது ஏன்?
பகலில் வெயில் அதிகமாக இருக்கும் நிலப்பகுதியில் காற்றானது வெப்பமடைந்து மேல்நோக்கி செல்கிறது இதனால் நிலப்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இந்த நிலையில் கடல் பகுதியானது நிலப்பகுதியை விட வெப்பம் குறைவாக இருக்கும் இதனால் கடலில் அதிக காற்றழுத்தம் இருக்கும்.
அதாவது நிலப்பகுதியில் குறைந்த காற்றழுத்தமும் நீர்நிலைகளில் உயரழுத்தமும் உருவாகிறது இந்த சூழ்நிலையில் நிலப்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி யை நிரப்ப அதிக காற்றழுத்தம் உள்ள நீர்நிலைகளில் இருந்து தரைக்காற்று பலமாக வீசும். அப்போது இடி மின்னலும் அதிகமாக இருக்கும்.
சுருக்கமாக சொல்லப்போனால் திருநெல்வேலி விருதுநகர் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் நிலப்பகுதி வெப்பமடைந்து காற்றானது மேல்நோக்கி செல்கிறது இந்த நிலையில் நிலப்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இந்தநிலையில் நீர்நிலைகளில் இருந்து வரும் ஈரக்காற்றானது சூடாக உள்ள நிலப்பகுதியை அடையும் போது ஈரப்பதமானது ஆவியாகி மேல்நோக்கி சென்று இடி மேகங்களை உருவாக்குகிறது. இதையே வெப்பசலனமழை என்கிறோம்.
வழக்கமாக இம்மழைப்பொழிவானது மாலை நேரங்களில் குறிப்பாக 4 மணிக்கு வருவதால், மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு (4'O Clock rain fall) என்று அழைக்கப்படுகிறது. வெப்பசலன மழை பொதுவாக மாவட்டம் முழுவதும் மழை பெய்யாது. எங்கு மேகம் உருவானதோ அதே இடத்தில் மழை பெய்து விடும். ஆனால் பக்கத்து ஊரில் மழை பெய்யாது .
வெப்பசலனமழை கணிப்பதே கடினம். எங்கள் ஊரில் மழை பெய்யவில்லை என்று நினைக்காதீர்கள். இயற்கையை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
-Tenkasi Weatherman.