வரலாற்றில் இன்று 13-11-1992 நெல்லை தூத்துக்குடியை நிலைகுலைய வைத்த புயல் :
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி சீமை.
நம் தமிழகத்தில் எத்தனையோ பேரிடர்களை சந்திக்கிறோம். அதில் 1992 ல் தென் மாவட்டங்களை தாக்கிய அதி தீவிர புயல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். :
1992 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம்தேதியை ஒட்டிய நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தென் கிழக்கு வங்க கடலில் உருவாகிறது பின்னர் படிப்படியாக வலுவடைந்து நவம்பர் 10 ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது அதன் பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் 11 ம்தேதி புயலாக வலுப்பெறுகிறது.
புயல் சின்னமானது தென் மேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 12 ம்தேதி இலங்கையின் தெற்கு பகுதியில் கரையை கடக்கிறது. இங்கு கரையை கடந்து பின்னர் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதிக்குள் நுழைகிறது.
நவம்பர் 13 ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்தை புயல் தாக்குவதற்கு முன்பே புயலானது மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது (Sever cyclonic storm).தூத்துக்குடி திருச்செந்தூரை மையமாக வைத்து புயலானது கரையை கடந்து அதன் பின்னர் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அரபிக்கடலுக்கு சென்றது. நவம்பர் 14ம்தேதி அரபிக்கடலுக்கு சென்ற பின்னர் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கேரளா கர்நாடகா மாநிலங்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது
நவம்பர் 13 ம்தேதி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. .
1992 ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையை கடந்த புயலால் தென் தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை சந்தித்துள்ளது .அப்போதைய தென் தமிழகத்தின் சேத மதிப்பு 69 மில்லியன் கோடியாக கணக்கிடப்பட்டது. நவம்பர் 13,1992 ல் திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி 965 மிமீ மழையும் மாஞ்சோலை 821 மிமீ மழையும் நாலுமுக்கு 612 மிமீ மழையும் ஊத்து 420 மிமீ மழையும் பெய்து நெல்லையை அதிர வைத்து விட்டது. இதே நாளில் கல்லிடைக்குறிச்சி 308 மிமீ மழையும் சிற்றாறு 1 -305 மிமீ மழையும் செங்கோட்டை 253 மிமீ மழையும் கொடைக்கானல் 276 மிமீ மழையும் பதிவானது.
உங்களுக்கு தெரியுமா? நவம்பர் 13 நெல்லை மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி பகுதியில் ஒரே நாளில் 965 மிமீ மழை பதிவானது இதுதான் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான உச்சகட்ட மழை பொழிவாகும். தற்போதுவரை மாஞ்சோலை மழை சாதனையை எந்த இடமும் முறியடிக்கப்படவில்லை.
இந்தளவு பெய்த பெருமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது. அணைகள் உடையும் அபாயத்தை தவிர்க்க அன்று நள்ளிரவில் அணையை திறந்துவிட்டனர்.
2 லட்சம் கன அடி நீர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில், கரையோரக் குடியிருப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கின.
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் :
பாபநாசம், திருவள்ளுவர் நகரில் 1992-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் தண்ணீர் புகுந்தது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் த.மு.சாலை வரை கடைகள் வெள்ளத்தில் மூழ்கின. சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.
குமரி துண்டிப்பு
அதே நாளில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன.
நெல்லை - திருச்செந்தூர் போக்குவரத்து துண்டிப்பு : வரலாறு காணாத மழை வெள்ளப்பெருக்கால் நெல்லை திருச்செந்தூர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்போக்குவரத்து சரி செய்ய மூன்று நாட்கள் ஆகியுள்ளது.
தாமிரபரணி நதியில் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்குச் சென்றது. அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, தோழப்பன்பண்ணை மற்றும் தெற்கு தோழப்பன்பண்ணை பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் வெள்ள நீர் பாய்ந்து விவசாயிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் வாய்க்காலில் இருந்து ஆதிநாதபுரம், மளவராயநத்தம் பகுதிகளிலும் உள்ள விளை நிலங்களையும் முழுவதுமாக சேதப்படுத்தியது. அத்துடன் ஸ்ரீவைகுண்டம் அருகே கேடிகே நகர் மற்றும் முக்காணி ஆத்தூர், பகுதிகளில் குடியிருப்புப் பகுதியிலும் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத பேரிடரை சந்தித்த தென்மாவட்டங்களை சரி செய்ய அப்போதைய தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வெள்ளம் வடிந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அப்போதைய தென் தமிழகத்தின் சேத மதிப்பு 69 மில்லியன் கோடியாக கணக்கீடப்பட்டது.
வரலாறு சொல்வது என்ன? தென் தமிழகம் எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள் அது தவறு. சாதாரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தாலே மாஞ்சோலை பாபநாசம் நீர்பிடிப்பு பகுதிகள் 400 மிமீ க்கு மேல் மழை பதிவாகிறது. இதனால் எதிர்காலத்தில் புயலோ பெருமழையோ தென்தமிழகத்திற்கு வந்தால் எதிர்கொள்ளும் வகையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
வரலாற்றில் இதுவும் கடந்து போகும்.
xfdgdsfgs
sgfcxvbeeq324124
bcvbdfgb