மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலகட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலமாகும்.பொதுவாக கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். சமீப காலமாக இயற்கை எழில் கொஞ்சும் உயரமான மேற்கு தொடர்ச்சி மலையை எல்லையை கொண்ட மாவட்டங்களில் தற்போது கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் அதிகரிப்புக்கு என்ன காரணம்?
ஈரப்பதம் இல்லாத வறண்ட கிழக்கு திசை காற்று வீசுவதன் காரணமாக குமரி தென்காசி திண்டுக்கல் கோவை ஈரோடு திருப்பூர் நாமக்கல் கரூர் சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
கிழக்கு திசை காற்று வீசுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வீசுவதில்லை. கேரளாவில் இருந்து மேற்கு திசை காற்று தமிழகத்தை நோக்கி வீச தொடங்கியவுடன் குமரி தென்காசி கோவை மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவகாற்று வீசு தொடங்கியவுடன் குறிப்பாக மே மூன்றாவது வாரத்திற்கு பிறகே மலை மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்.
தற்போது கிழக்கு கடலோர மாவட்டங்களான கடலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை இராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் குறைவாகவே உள்ளது காரணம் வங்க கடலில் இருந்து வீசும் கிழக்கு கடல் காற்று தமிழக கடலோர மாவட்டங்களில் நுழைவதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் வெப்பநிலை குறைவாக உள்ளது இதே நிலை வரும் நாட்களிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது எப்போது?
கடலோர பகுதியை பொறுத்தவரை கடல் காற்று வீசுவது தடைபடும் போது வெப்பம் அதிகரிக்கும். குறிப்பாக மே ஜுன் மாதங்களில் தென் மேற்கு பருவ காற்று வீச தொடங்கியவுடன் தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வீசுவது தடைப்பட்டு விடும் அப்போது தமிழக கடலோர மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.
மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்கு பருவமழை எப்போதெல்லாம் வலுகுறைகிறதோ அப்போதெல்லாம் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும்.
மார்ச் ஏப்ரல் மே ஆகிய 3 மாதங்கள் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கோடைகாலமாகும். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடலோர மாவட்டங்களுக்கு கோடைகாலங்கள். விருதுநகர் மதுரை சேலம் நாமக்கல் கரூர் திருச்சி ஆகிய உள் மாவட்டங்களில் ஆண்டுக்கு பெரும்பாலான நாட்களில் அதிகப்படியான வெப்பநிலையே இருக்கும்.
-Tenkasi Weatherman.