Back
artical-details

மாஞ்சோலையில் நடக்கப்போகும் கடைசி பொதுத்தேர்தல்?!

  • date : 2024-04-18
  • Category : Manjolai

மாஞ்சோலை: தொழிலாளர்களை வெளியேற்றும் கம்பெனி; எஸ்டேட்டில் நடக்கப்போகும் கடைசி பொதுத்தேர்தல்?!

ஏப்ரல் 19ஆம் நாள் தமிழ்நாட்டில் 18ஆவது மக்களவைத் தேர்தல். நகர்புற / கிராமப்புற பகுதிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எஸ்டேட் பகுதியில் நடக்கும் தேர்தல். ஆரம்ப காலந்தொட்டு, எப்பொழுதுமே தேர்தல் கால நாட்கள் எஸ்டேட் மக்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழா தான்.
100க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைசெய்யும் நிறுவனங்களில், வேலைக்குழு (Works Committee) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான தேர்தல்களை நடத்தவேண்டுமென தொழிற்தாவா சட்டம், 1947 கூறுகிறது. அதன்படி எஸ்டேட் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்குள் வேலைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை கம்பெனி நடத்தும்.

அதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களே, நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இணைப்புப்பாலமாக இருப்பதுடன், அவ்வப்போதைய நடைமுறைகள் தொடர்பாக கம்பெனியுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவார்கள். அதனால் அந்தத் தேர்தலில் மறைமுகமாக கம்பெனியின் தலையீடு அதிகமாக இருக்கும்.

அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள், தங்கள் ஆளுமையைக் காட்டும் கண்ணாடியாகவே வேலைக்குழு தேர்தல் பார்க்கப்பட்டது. 1970களுக்கு முன்பு வரையிலும் அப்போது வலிமையான தொழிற்சங்கமாயிருந்த ஐஎன்டியுசி-யே பெரும்பான்மையான தேர்தல்களில் வென்றது. குட்டித் தேவர், ஐயாக்குட்டி, காசி, நாராயணன் போன்றோர் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாஞ்சோலையில் நீண்டகாலம் வேலைக்குழு உறுப்பினர்களாக இருந்தனர். அதிலிருந்து பிரிந்து இராமசாமி கங்காணி ஆரம்பித்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் சங்கமும் பின்னர் மாஞ்சோலையில் வெற்றிபெற்றது.


1970களில் ஒருமுறை திமுக-வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தாசன், சந்தாதாரர்களை குறைவாக வைத்திருந்த போதிலும், கடும் போட்டியை உண்டாக்கி, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இருப்பினும் பின்னர் திமுகவை வலுவான தொழிற்சங்கமாக வளர்த்து வெற்றிபெற்றதுடன், கட்சியும் தொடர்ச்சியாக வெற்றிபெறுவதற்கு அடிகோலினார்.

நாலுமுக்கில் மலையாளிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என இரு கட்சிகளிலேயே பெரும்பாலும் உறுப்பினர்களாக இருந்தனர். எஸ்டேட்டில் சிறுபான்மையாக இருந்த அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்ததால், வேலைக்குழு உறுப்பினர்களில் மலையாளிகளின் பிரதிநிதித்துவம் எப்போதும் இருந்தே வந்தது. கூலி உயர்வுப் போராட்டம் நடத்தப்பட்ட 1998க்குப் பிறகு, கடந்த 25 ஆண்டுகாலமாக வேலைக்குழு தேர்தலை கம்பெனி நடத்தவே இல்லை.

1960களில் ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட மாஞ்சோலை, 1970களின் துவக்கத்தில் மணிமுத்தாறு பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டது. மொத்தமிருக்கும் 15 வார்டுகளில் எஸ்டேட் பகுதியில் 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் மணிமுத்தாறு பேரூராட்சி உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன் தலைவராக, நகர்புற பிரதிதிநிதிகளே பொறுப்புவகித்து வந்தனர். முதல்முறையாக கடந்த ஊராட்சித் தேர்தலில், மாஞ்சோலை எஸ்டேட் பெண் தொழிலாளியான அந்தோணியம்மாள், திமுக தலைமையால் பேரூராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது மாஞ்சோலை மற்றும் அங்குள்ள இதர எஸ்டேட்டுகள். ஆரம்பகாலம் தொட்டு தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருந்த மாஞ்சோலை பகுதி, 2009 முதல் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆண்டு முழுக்க அங்கு தங்கியிருக்கும் தொழிலாளர்களையும், அவர்தம் குடும்பங்களையும் மட்டுமே பார்க்க நேரிடுகிற எஸ்டேட்டில், தேர்தல் காலத்தில் மட்டும் ஊர்நாடுகளில் இருந்து புதியபுதிய ஆட்கள் வந்து போவார்கள். தொழிலாளிகளை உறவினர்களாகக் கொண்டவர்களில் சில வெளியூர் வாசிகள் தேர்தல் நேரத்தில் அங்கேயே சிலநாட்கள் தங்கியும் இருப்பர்.

அந்த சமயத்தில் அதற்கு முன்னர் எஸ்டேட் வாசிகள் பார்த்திராத விதவிதமான வாகனங்களைப். பார்க்க இயலும். எஸ்டேட் கேண்டீனில் உணவுக்கான ஆர்டர்கள் குவியும். அன்றாடம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உணவும், தின்பண்டங்களும் தயாரிப்பதால், வழக்கமாக கேண்டீன் செல்லும் எஸ்டேட் ஆட்களுக்கே தின்பண்டங்கள் இல்லாமல் போகும் நிலையையும் அந்த சமயங்களில் எதிர்கொள்வர்.

கட்சிப் பொறுப்பாளர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதனால் அந்த நாட்களில் அவர்களை கையில் பிடிக்கமுடியாது. ஒருவித கெமயுடனேயே எந்நேரமும் திரிவார்கள். தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கொடியில் உடைகள், எஸ்டேட்டில் அடிக்கும் குளிருக்கு ஏற்ப மஃப்ளர், தொப்பி, சுவெட்டர் அணிந்தபடி ஆங்காங்கே ஆட்கள் திரிவார்கள். பொதுப்பார்வையிலிருக்கும் லயன்களின் சுவற்றில், தங்கள் கட்சி சின்னத்தையும், தலைவர் படத்தையும் வரைந்திருப்பர் சிலர். தினமும் சாயங்காலம் வேலைமுடிந்து வீட்டிற்கு எல்லோரும் வந்த பின்னர், ஒவ்வொரு கட்சிக்காரர்களாய் வரிசையாக வாக்கு சேகரிக்க வீடுகளுக்கு வருவார்கள்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர், பாஜக என எஸ்டேட்டில் எல்லா கட்சிகளுக்கும் கிளை இருக்கும். அதில் சிலர் உறுப்பினர்களாவும் இருப்பர். “தராசு மக்கள் மன்றம்” சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதன் தலைவர் ஷ்யாம்-க்கு எஸ்டேட்டில் கிளை உருவாக்கப்பட்டு, எஸ்டேட் தொழிலாளி சாக்ரடீஸ் வாக்கு சேகரித்த நிகழ்வும் உண்டு

இரம்மியமான சூழல், நகரிலிருந்து வெகுதொலைவில் வனத்துக்குள் அமைந்திருப்பதால், நினைத்த மாத்திரத்தில் கிளம்பி தொந்தரவுக்கு ஆட்கள் யாரும் வர முடியாது என்பது போன்ற சில காரணங்களால், பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஓய்வுக்காக எஸ்டேட் பகுதிக்கு வந்து தங்கிச்செல்வது வாடிக்கை.

இருப்பினும், வால்பாறை, குன்னூர், ஊட்டி போன்ற தேயிலைத்தோட்ட பகுதிகளைப்போல வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு வாக்காளர் எண்ணிக்கை அங்கு இல்லாததால், தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்கக்கூட, வேட்பாளர்கள் தவிர்த்து மாநில அளவிலான தலைவர்கள் எவரும் வருவதில்லை. காமராசர், ஹேமச்சந்திரன், துரைமுருகன், ஆலடி அருணா, ஆவுடையப்பன், இசக்கி சுப்பையா என சில அரசியல் கட்சித்தலைவர்கள் எஸ்டேட்டுக்கு வருகை தந்துள்ள போதிலும் அவர்கள் எவரும் தேர்தல் நேரத்தில் வந்ததில்லை.

தோட்டத்தொழிலாளர் சட்டத்தில் உள்ளதால், தண்ணீர், மின்சாரம், மருத்துவம் என எஸ்டேட் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் எல்லாவற்றையும் கம்பெனியே பார்த்துக்கொள்ளும். அதனால் நகர/ கிராம பகுதிகளில் வழங்குவது போல அரசியல் கட்சியினரின் வழக்கமான தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் அங்கு செல்லுபடியாகாது. விதிவிலக்காக சாலையைச் செப்பனிடுதல், குழந்தைகளின் படிப்புச் செலவு, பழுதாகாத பேருந்து வசதி என்பது போன்ற தனித்துவமான சில வாக்குறுதிகளையே எல்லா கட்சியினரும் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு எஸ்டேட்டிலும் இருக்கும் பள்ளிக்கூடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்குள்ள தொழிலாளர்களே அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் பிரதிநிதிகளாக வாக்குச்சாவடி மையங்களில் அமர்ந்திருப்பர். எஸ்டேட்டில் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் என்பதால் அங்கு கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை. தேர்தலை முன்னிட்டு இதுகாறும் எவ்வித அசம்பாவிதமும் அங்கு நிகழ்ந்ததில்லை

நாங்கள் எஸ்டேட்டிலிருந்து வெளியேறிய பின்னரும், வாக்காளர் அடையாள அட்டையில் கொஞ்சகாலத்துக்கு எஸ்டேட் முகவரியே நீடித்தது. அப்போது 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரையிலிருந்து எஸ்டேட்டுக்குச் சென்று, அங்கு கடைசியாய் வாக்களித்துத் திரும்பினோம்.

பொதுத்தேர்தல் நாளன்று எஸ்டேட்டில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கும் கம்பெனி. கிடைக்காமல் கிடைத்த அந்த விடுமுறை நாளில் வாக்களித்துவிட்டு, தங்களுக்கு இருக்கும் “உலக” அனுபவத்தில் தேர்தல் முடிவுகளை கணித்துக் கொண்டிருப்பர் பலர். சில ஆண்கள் காட்டுக்குள் சென்று தேர்தல் விடுமுறையை “குதூகலமாகக்” கொண்டாடித் திரும்புவர். மொத்தத்தில் அன்று எஸ்டேட் களைகட்டும்.

நாலுமுக்குக்கு பக்கத்தில் உள்ளது மேல் கோதையாறு. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. அங்கு கோதையாறு அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்ட 1970க்குப் பின்னர் தனியார் யாரும் வசிக்க அனுமதியில்லை. அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மின்வாரிய அதிகாரிகள், வனப் பாதுகாவலர்கள், காவல்துறையினர் என பத்துக்கும் குறைவானோர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு மின் உற்பத்தி நிலைய வளாகத்திலுள்ள மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும்.

அந்த பத்துபேர் வாக்களிப்பதற்காக ஆரம்ப நாட்களில், நாகர்கோவில், தடிக்காரன்கோனம், பாலமோர் எஸ்டேட், வீரப்புலி, முத்துக்குளி வயல் காட்டுப்பாதை வழியே புலிகள் அடிக்கடி தென்படும் அடர் வனப்பாதையில் அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை கழுதைகளில் ஏற்றிக் கொண்டுவந்தனர். பாதுகாப்பு இல்லாத பயணம் என்பதுடன், அதிக நேரமும் எடுத்துக்கொள்ளும் அந்த பாதை.


2006க்குப் பின்னர் மின்சார வாரிய லாரியிலும், சமீப காலங்களில் அரசு வாகனங்களிலும், வள்ளியூர், பணகுடி, சேரன்மகாதேவி, கல்லிடை, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியே சுமார் 150 கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணித்து 4 வாக்குச்சாவடி பணியாளர்கள், 3 மண்டலக் குழு அதிகாரிகள், 2 காவலர்கள் என 9 அதிகாரிகள் கோதையாறு சென்று வெற்றிகரமாக தேர்தலை நடத்தி வருகின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகால எஸ்டேட் வரலாற்றில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களில், சட்டமன்ற/ நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில்தான் என்றில்லை, சுயேட்சையாகக் கூட வேட்பாளர் ஒருவரும் இதுநாள் வரையிலும் உருவாகிவிடவில்லை.


2000த்தின் துவக்க காலம் வரையிலும் சுமார் 6000 வாக்குகள் வரை இருந்த எஸ்டேட் பகுதியில், நாளடைவில் பெருவாரியான தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சுமார் 1000க்கும் குறைவான வாக்காளர்களே இருக்கின்றனர். அதனால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் எவரும் இம்முறை வாக்கு சேகரிக்கக்கூட எஸ்டேட் பகுதிக்கு வரவில்லை. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி வேட்பாளருக்காக அங்குள்ள மக்கள் தங்களுக்குள்ளாகவே வாக்கு சேகரித்துக் கொள்கின்றனர்.

இதற்கு முன்னர் பலமுறை வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க இருப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் அங்கிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் வெளியேறி விடவேண்டும் என கடந்த ஆண்டின் துவக்கம் முதலே அவ்வப்போது சொல்லிவருகிறது கம்பெனி. ஒருபக்கம் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. கம்பெனியின் கூற்று உறுதியாகுமானால், எஸ்டேட்டில் நடக்கப்போகும் கடைசி பொதுத்தேர்தல் இதுவாகவே இருக்கும்.

-இராபர்ட் சந்திரகுமார் (Advocate, Highcourt, Madurai bench

Write Reviews

0 reviews