உடல் நலத்துடன் வாழ்வு அமைந்திட காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணெய் என உணவுப் பொருட்களில் ஆர்கானிக் வகையினங்களை நாடிச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் ஒருபகுதியாக ஆர்கானிக் தேநீரை உலகம் முழுவதும் அருந்துகின்றனர்.
தொடக்க காலத்தில், யூரியா, பொட்டாசியம் போன்ற செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி கலந்த பல்வேறு களை மருந்துகளையும் பயன்படுத்தி, தேயிலை உற்பத்தி செய்துவந்தது கம்பெனி. செயற்கை உரங்கள் உடலின்மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு கால்முட்டு உயரத்துக்கு பெரிய பூட்ஸ்களும், கையுறைகளும் கொடுத்தது கம்பெனி. அவ்வளவு வீரியமிக்க உரங்களைத் தீனியாகக் கொண்டு உற்பத்தியாகும் தேயிலையையே பலரும் அருந்துகிறோம்.
1960களின் பிற்பகுதியில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் குத்தகை நிலத்தில் அதுவரையிலும் பயன்படுத்தாத சில பகுதிகளை, இயற்கை வழியில் தேயிலை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கியது கம்பெனி. ஊத்து எஸ்டேட்டில் தேயிலைச்செடிகளை நடுவதற்கு முந்தைய பணிகளான, புல் செதுக்குதல், தரையை சமன் செய்தல், கல் பொறுக்குதல், களை எடுத்தல் போன்ற வேலைகளை பெண்களும், உயரமான பகுதிகளில் அங்கங்கே கிடக்கும் பெரியபெரிய கற்களை தரைக்கு உருட்டிவிடுதல், அங்கிருக்கும் மரங்களை வெட்டுதல் போன்ற பணிகளை ஆண்களும் செய்தனர்.
சிறு செடி, கொடி, இலைகளை அப்படியேயும், பெரிய இலை தளைகளை மிஷினில் கொடுத்து சிறு துண்டுகளாக்கியும், ஒதுக்குப்புறமான காடுகளில் அதற்கென வெட்டப்பட்ட குழிகளில் போட்டு தயாரிக்கப்படும் கம்போஸ்ட் உரம், எஸ்டேட்டில் கிடைக்கும் மாட்டுச் சாணி போன்றவைகளையே அந்த தேயிலைக்கு உரமாகப் பயன்படுத்தியது கம்பெனி. அவைகளை அரைப்பதற்கென பிரத்தியேகமாக 1988 ஆம் ஆண்டு ஊத்து தேயிலைத்தொழிற்சாலை கட்டப்பட்டதுடன், அங்கு முழுக்க ஆர்கானிக் தேயிலையே உற்பத்தி செய்யப்பட்டது.
அதிக பலன் தருவதற்காக, சூரிய வெளிச்சம் வருவதற்குள் இயற்கை மருந்துகளை தேயிலைச்செடிகளில் தெளிக்கவேண்டி, அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் களை மருந்தடிக்கச் சென்றுவிடுவர் அந்த வேலைபார்க்கும் தொழிலாளிகள். அதிக சிரத்தை எடுத்து தயாரிக்கப்படுவதால், எஸ்டேட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் ஆர்கானிக் தேயிலைக்கு அதன் தனித்த சுவை காரணமாக உலகில் பல நாடுகளில் மவுசு அதிகம். அதன் தரத்திற்காக பின்னர் ஊத்து ஆர்கானிக் தேயிலை, ISO 9002:2000 சான்றிதழ் பெற்றது.
ஒரே நாளில் அங்கு ஆர்கானிக் தேயிலை உற்பத்தி வந்துவிடவில்லை. 01.06.1977லில் எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்தவர் மாடசாமி (எ) மணி. நாலுமுக்கில் காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்ததால், “ஐஎன்டியுசி” மணி என அறியப்பட்ட அவர், பழைய எஸ்எஸ்எல்சி படித்தவர். அங்கு தேவைப்படுபவர்களுக்கு மனு எழுதிக்கொடுப்பது, கம்பெனியின் சட்ட மீறல்களை அவ்வப்போது அரசு அதிகாரிகளுக்கு மனு எழுதிப்போடுவது அவரது வழக்கம்.
ஊத்து எஸ்டேட்டைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு நாலுமுக்கில் ஆர்கானிக் தேயிலை உற்பத்திசெய்ய முடிவெடுத்தது கம்பெனி. அதற்கென ஊத்துக்குப் பக்கத்திலிருக்கும் 23ஆம் எண் தேயிலைக்காட்டை தேர்ந்தெடுத்தனர். அங்கிருக்கும் தேயிலைச்செடிக்கு அடியில் குழி தோண்டி அதில் கம்போஸ்ட் உரத்தைப் போடவேண்டும். குழி வெட்டும் வேலைக்கு மாடசாமி உள்பட 29 ஆண் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எஸ்டேட்டில் பொதுவாக, தேயிலை பறிக்கும் வேலை, டீ ஃபேக்டரி வேலை மட்டும்தான் எட்டு மணிநேரம் நடக்கும். கவாத்து, காட்டுச்செடி பிடுங்குவது, குழி வெட்டுவது, உரம் போடுவது போன்ற இதர வேலைகளெல்லாம் மதியம் இரண்டு மணிக்கு முடிந்துவிடும். அவர்கள் மதிய உணவு இடைவேளையின்றி, ஒரேயடியாக வேலைபார்ப்பார்கள்.
எப்போதும்போல குழி வெட்டும் வேலையை, மதியம் 2 மணிக்குள் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு மாதம் கழித்து திடீரென ஒருநாள், “நீங்க பாக்கது எட்டு மணி நேர வேல, அதுனால இனி தேயில பறிக்கவங்க மாதிரி, சாய்ங்காலம் நாலு முப்பதுக்கு சங்கடிக்கும் வரைக்கும், காட்லயே இருந்து வேல பாக்கணும்” என்றும், “இனிமே கூடுதல் ஆழத்துக்கு குழி வெட்டணும்” என்றும் காட்டு அதிகாரி உத்தரவிட்டார். கம்பெனி சொன்ன மாதிரி மாலை நான்கு முப்பது வரைக்கும் காட்டிலேயே இருந்து வேலை பார்த்தாலும் கூடுதல் ஆழத்திற்கு யாரும் குழி வெட்டவில்லை.
அந்த 29 பேரில் முன் வரிசையில் நின்ற வெவ்வேறு தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்களான இசக்கி, நாராயணன், ராஜ், மாடசாமி ஆகிய நால்வரைத் தேர்ந்தெடுத்தது கம்பெனி. இதர தொழிலாளிகளுக்கு பீதி உருவாக்கும் வகையில், “கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரிவர செய்வதில்லை” என்று குற்றம்சாட்டி, காரண விளக்கம் கோரி 1992ல் அவர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. பதிலில் திருப்தி அடையாத கம்பெனி, தொழிற்தாவா சட்டத்தின்படி விசாரணை நடத்தி அவர்களை 1993ல் வேலைநீக்கமும் செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தனது குற்றச்சாட்டினை கம்பெனி நிரூபிக்கவில்லை என்று சொல்லி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு 27.12.2000 அன்று வேலைநீக்க உத்தரவினை இரத்துசெய்து, அவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கச்சொல்லி திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்தது. தீர்ப்பின் வாயிலாய், மீண்டும் அவர்களுக்கு வேலை கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டது கம்பெனி.
இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல், மனைவியின் சொற்ப சம்பாத்தியத்தில் எஸ்டேட்டில் வாழ்ந்து வந்தாலும், மீண்டும் வேலை கிடைத்ததே பெரும் பாக்கியம் என்ற நினைப்பில், மற்ற மூவரும், பணிநீக்க காலத்திற்கு சம்பளம் கேட்டு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. ஆனால், தனது பணிநீக்க காலத்திற்கான ஊதியம் வேண்டி 2003ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் மாடசாமி. அவருக்கு வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் 50% ஊதியம் வழங்கிட வேண்டும் என்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 30.07.2010 அன்று, உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். 2013ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தபிறகும் அந்தத் தொகையை கம்பெனி வழங்கவில்லை. ஒரு கட்டத்தில் கம்பெனியின் சிங்கம்பட்டி குரூப் மேனேஜருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு, 2015ஆம் ஆண்டில் அவருக்குச் சேரவேண்டிய தொகை கொடுக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கம்பெனிக்கு எதிரான தொடர் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைச் சுவைத்தார் கூலித் தொழிலாளியான மாடசாமி.
எஸ்டேட்டில் உற்பத்தியாகும் ஆர்கானிக் தேயிலை, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் அதற்கு அதிக விலை கிடைத்தது. அதனால் 1998 வேலைநிறுத்த போராட்டத்திற்குப் பிற்பாடு நாலுமுக்கில் ஆர்கானிக் தேயிலையை அதிகமாக வளர்க்கத் தொடங்கியது கம்பெனி. உலக அளவில் அவ்வப்போது தேயிலையின் விலை, ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், எஸ்டேட்டில் விளைவிக்கப்படும் ஆர்கானிக் தேயிலைக்கான தொடர் தேவை இருந்துகொண்டே இருந்தது. அந்த வருவாயில்தான் எஸ்டேட் தொடர்ந்து இயங்கி வந்ததாகவும் எஸ்டேட்டில் அப்போது அதிகாரிகள் தெரிவிப்பர்.
எஸ்டேட் பகுதியில் தரமான ஆர்கானிக் தேயிலை உற்பத்தி செய்வதால், அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒரு பங்கை ஒதுக்கி, ஜெர்மனியில் உள்ள நியாய வாணிப முத்திரைக்கான பன்னாட்டு நிறுவனம் 2000க்குப் பிறகு எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. அதன் உதவியுடன், 2004ஆம் ஆண்டு வாக்கில், 'ஆர்கானிக் ஃபவுண்டேஷன்' என்ற ஒரு அமைப்பினைத் தொடங்கியது கம்பெனி. அதில் ஒவ்வொரு எஸ்டேட்டில் இருந்தும் 2 தொழிலாளர்கள் பொறுப்பாளர்களாக இருந்தனர். பொறுப்பில் இருந்த ஒரு பெண் தொழிலாளி இறந்துபோனதால் அம்மா அந்த இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஆர்கானிக் தேயிலை உறபத்தி செய்யும் பகுதிகளில் இருக்கும் தொழிலாளர் பிரதிநிதிகளின் கூட்டத்தை வால்பாறையில் உள்ள முடிஸ் எஸ்டேட் பகுதியில் ஏற்பாடு செய்தது கம்பெனி. அதில் கம்பெனியின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். மாஞ்சோலை பகுதியின் பிரதிநிதியாக அம்மா கலந்துகொண்டார். அம்மாவுடன் துணையாய் நானும் சென்றிருந்தேன். அதில் அம்மாவின் அனுபவப் பகிர்வினைத் தொடர்ந்து, 2007 ஆகஸ்ட் 16 & 17 அன்று கல்கத்தாவில் நடந்த ஆர்கானிக் தேயிலை உற்பத்தி செய்யும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த உரிமையாளர்கள் / தொழிலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காய் அம்மாவை விமானத்தில் அழைத்துச் சென்றது கம்பெனி. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்ரீலங்கா, இந்தியா ஜப்பான், நேபாளம், இங்கிலாந்து, உகாண்டா என 9 நாடுகளைச் சேர்ந்த 27 பேர் அதில் கலந்து கொண்டனர். இரண்டு பெண் அதிகாரிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் அம்மா ஒருவரே பெண் தொழிலாளி.
ஆர்கானிக் ஃபவுண்டேஷன் மூலம் பின்னர் 10 / 12 மற்றும் கல்லூரிகளில் படிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையும், எஸ்டேட்டில் தொழிலாளர்களின் இறப்பின்போது இறுதிச்சடங்கிற்கான செலவுக்கு ரூபாய் 2,000/- உள்ளிட்ட பொருளாதார உதவிகளை தொழிலாளர்களுக்கு செய்யத்துவங்கியது கம்பெனி. இதோடு சேர்த்து பின்னர் குளிர்பகுதிகளுக்குத் தேவையான டார்ச் லைட், ஹாட் பாக்ஸ், மெத்தை, கம்பளி, குக்கர், அயன் பாக்ஸ், சோலார் மின் விளக்கு, ஃபிளாஸ்க், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டது. இவை தற்போது வரை தொடர்கிறது. கட்டணம் எதுவுமின்றி இவ்வாறு கிடைக்கும் பலன்கள் எஸ்டேட் மக்கள் பலருக்கும் பேருதவியாக இருந்துவருகிறது.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே எஸ்டேட்டில் ஆர்கானிக் தேயிலையின் உற்பத்தி துவங்கியதன் பயனை அங்கு வாழ்ந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளில் அனுபவித்தே வந்தனர்.
இராபர்ட் சந்திரகுமார் (Advocate, High court Madurai bench)