மாஞ்சோலை: ஒரு நூற்றாண்டாய் வனத்தைப் பாதுகாத்துவரும் மாஞ்சோலை மக்களும், பிரச்னைகளும்!
11.02.2028 வரையிலும் கம்பெனிக்கு குத்தகை காலம் இருக்கிறதே? அதற்கு இன்னும் நான்கு ஆண்டு இருக்கையில், எஸ்டேட்டை மூடப்போவதாகச் சொல்லி, இப்போதே ஏன் மக்களை வெளியேறச் சொல்கிறது கம்பெனி? தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கையில், அங்குள்ள தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, எஸ்டேட் தொடர்ந்து இயங்கிட அரசிடம் நீங்கள் முறையீடு செய்யலாமே? என கேட்டார் எனது துணைவி சபிதா.
எதார்த்தத்தில் மாஞ்சோலை எஸ்டேட் உருவாக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்குள்ளாகவே குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஒருவேளை அவ்வாறு 72 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த குத்தகை காலம் உள்ளபடியே முடிவுக்கு வந்திருக்குமானால் அதன் பின்னர் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்த, எஸ்டேட் வாசிகளான நாங்கள் எவரும் அங்கு வாழ்ந்திருக்கவே வாய்ப்பில்லாமல் போயிருந்திருக்கும். 1948ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரிக்கு மாற்றுதல்) சட்டத்தினைத் தொடர்ந்து 19.02.1952 அன்று சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் அரசின் சொத்தாக மாற்றப்பட்டது. அதன் விளைவாக, மாஞ்சோலை எஸ்டேட் உருவாக்கத்திற்காக சிங்கம்பட்டி ஜமீனுக்கும், தி பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேசன் (பிபிடிசி) நிர்வாகத்திற்குமிடையே 12.02.1929 அன்று ஏற்படுத்தப்பட்ட 99 ஆண்டு குத்தகை அன்றோடு முடிவுக்கு வந்தது. அதனால் பிபிடிசி நிர்வாகம் எஸ்டேட் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனால் சிங்கம்பட்டி ஜமீனுடன் ஏற்படுத்திக்கொண்ட குத்தகை ஆவணத்தை, தமிழ்நாடு அரசுடன் 13.08.1958 உள்ளிட்ட வேறுசில தினங்களில் புதுப்பித்துக் கொண்டது பிபிடிசி. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும், புதிய புதிய நிபந்தனைகள் தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டது. அந்த புதிய விதிகளில் பிரதானமானது, “குத்தகை ஆவணத்தின் அடிப்படையில் எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், மணிமுத்தாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான 970 ஏக்கர் பரப்பளவுள்ள குசுங்குளி ஆறு பகுதியில் புதிதாக எந்தவிதமான தோட்ட விரிவாக்கமும் செய்யக்கூடாது” என்பதாகும். அதனால் அந்தப்பகுதி தற்போது வரையிலும் வனமாகவே தொடர்கிறது. களக்காடு பகுதியிலுள்ள வனம், 1976ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதன் அருகிலுள்ள மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகள் அமைந்திருக்கும் வனப்பகுதியையும், அதனைச் சுற்றியிருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட இதர வனப்பகுதியையும் 23.03.1978 அன்று காப்புக்காடாக (Reserve Forest) அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது வனத்துறை.
மாஞ்சோலை உள்ளிட்ட இதர தேயிலைத்தோட்டங்கள் அமைந்துள்ள எஸ்டேட் பகுதியை, அந்த அறிவிக்கையில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும், குத்தகை அடிப்படையில் உள்ள பகுதிகளுக்கு தனது பெயரில் பட்டா வழங்கிட வேண்டுமென்றும் இரண்டு மனுக்களை 1979ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் வனத்துறை அதிகாரியிடம் தாக்கல் செய்தது பிபிடிசி. இதற்கிடையில், 1995ஆம் ஆண்டில் வனத்துறைக்கும், அரசுக்கும் எதிராக அடுத்தடுத்து ஆறு வழக்குகளை தாக்கல் செய்தது எஸ்டேட் நிர்வாகம். அந்த வழக்குகளில் கம்பெனி இடைக்கால தடை பெற்றிருந்த காரணத்தால், வனத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த கோரிக்கை மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. 27.12.2002 அன்று இந்த வழக்குகளில் தீர்ப்பு பிறப்பித்தபோது, காப்புக்காடு அறிவிப்புக்கு எதிரான கம்பெனியின் கோரிக்கை மனுக்களை விரைவாக விசாரித்து வனத்துறை முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு அந்த கோரிக்கை மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, மனுதாக்கல் செய்யப்பட்டு 31 ஆண்டுகள் கழித்து, 2010ஆம் ஆண்டில் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவுக்கு எதிராக எஸ்டேட் நிர்வாகம் 2010ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 01.09.2015 அன்று தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தது கம்பெனி. இதற்கிடையில், 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு மலைப்பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ், “எஸ்டேட்டிலுள்ள காட்டு மரங்களை, எந்த தேவைக்காகவும் கம்பெனி வெட்டக்கூடாது” என்ற வனத்துறையின் அறிவிக்கையை இரத்து செய்யக்கோரி 1999ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது கம்பெனி. அந்த வழக்கில், வனப்பகுதிகளுக்கு மட்டுந்தான் அந்த சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்றும், தன்னிடம் இருப்பது வனமல்ல, விவசாய நிலம் என்றும், 1929ஆம் ஆண்டு குத்தகை ஆவணத்தில், விவசாய பணிகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் கம்பெனி வாதம் செய்தது. இறுதி விசாரணைக்குப் பின்னர், மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகள் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால் அந்த அறிவிப்பை இரத்து செய்யமுடியாது என 03.01.2006 அன்று தீர்ப்பிட்டு அந்த வழக்கினை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கம்பெனி வசமிருந்த எஸ்டேட் பகுதிக்கு, அதுவரையிலும் எஸ்டேட் நிர்வாகம் கொடுத்துவந்த குத்தகை வரியை 13.10.2005 அன்று அதீதமாக உயர்த்தியது வனத்துறை. மட்டுமின்றி, முன் தேதியிட்டு உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில், தரவேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், குத்தகை ஆவணத்தை ஏன் இரத்து செய்யக்கூடாது? என்றும் காரண விளக்கம் கோரி 03.12.2005 அன்று அறிவிப்பு ஒன்றையும் கம்பெனிக்கு கொடுத்தது வனத்துறை. அந்த இரண்டு அறிவிப்புகளையும் இரத்து செய்யக்கோரியும், தனது அனுபவத்தில் இருக்கும் எஸ்டேட் நிலத்திற்கு பட்டா வழங்கிடக் கோரியும் எஸ்டேட் நிர்வாகம் 2005ஆம் ஆண்டில் மூன்று வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நிலுவையில் இருந்த மேற்கண்ட வழக்குகளுடன், கம்பெனியால் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் சேர்த்து விசாரித்து, கம்பெனி தாக்கல் செய்த எல்லா வழக்குகளையும் 01.09.2017 அன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த உத்தரவுக்கு எதிராக கம்பெனி தாக்கல் செய்த வழக்கினை 19.01.2018 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்படியாக வனத்துறைக்கு எதிராக கம்பெனி தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக முடிவுக்கு வந்தன. இன்னும் சில மாதங்களில் எஸ்டேட் மூடப்போவது குறித்த விரைவான செயல்பாடுகளுக்கான விதை இங்கிருந்தே.
இதனைத்தொடர்ந்து 28.02.2018 அன்று மாஞ்சோலை எஸ்டேட் உள்ளிட்ட சிங்கம்பட்டி ஜமீனின் எஸ்டேட்டுகளாக இருந்த சுமார் 57,000 ஏக்கர் காட்டினை, காப்புக்காடாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து ஏற்கனவே உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் நிலுவையிலிருந்த 224 கோடி ரூபாய் வரி பாக்கியையும், மீதமிருந்த 10 ஆண்டு குத்தகை காலத்திற்கான வரியையும் கணக்கிட்டு, மொத்தமாக 700/- கோடி ரூபாயை கம்பெனி உடனடியாக செலுத்தவேண்டும் என்றும், அதனை செலுத்த தவறும்பட்சத்தில், குத்தகையை உடனடியாக இரத்து செய்வோம் என்றும் அதிரடியாக அறிவித்தது வனத்துறை. குத்தகை காலம் முடிவதற்கு முன்னர் தங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு வாங்கும் அளவுக்கு கடும் நெருக்கடியை எதிர்கொண்டது கம்பெனி. வனத்துறைக்கும் - கம்பெனிக்கும் இடையே நடந்த அந்த வழக்குகளில், எஸ்டேட்டில் 5 தலைமுறையாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும், விளிம்பு நிலையில் வாழும், ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களின் நிலை குறித்தும், அவர்களுக்கான மறுவாழ்வு குறித்தும், எந்த வழக்கிலும் விவாதிக்கப்படவோ அல்லது அதற்கான தீர்வோ முன் வைக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கபட்ட எஸ்டேட் மக்களின் எதிர்காலம் / வாழ்வாதாரம் தொடர்பாக 11.03.2018 அன்று திருநெல்வேலியில் வான்முகில் மனித உரிமை அமைப்பின் அலுவலகத்தில் திட்டமிடல் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு எஸ்டேட்டின் குத்தகை இரத்து செய்யப்படும் பட்சத்தில், தொழிலாளர்களுக்கு தங்களுக்கு எஸ்டேட்டில் பட்டா வழங்கவேண்டும் அல்லது தமிழ்நாடு தேயிலைத்தோட்டக் கழகத்தின் (TANTEA) கட்டுப்பாட்டில் கொண்டுவந்து எஸ்டேட்டை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்றும் 2018 ஏப்ரலில் தமிழ்நாடு அரசுக்கு மனு கொடுத்தனர் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் இந்த கோரிக்கை மனுவானது இதுநாள் வரையிலும் பரிசீலிக்கப்படவில்லை. தாங்கள் எவ்வளவு காலம் இனி எஸ்டேட்டில் தொடர்ந்து வேலைபார்க்கப் போகிறோம்?. எப்போது எஸ்டேட்டின் குத்தகை இரத்து செய்யப்படும்?, வனத்துறை எப்பொழுது எஸ்டேட் பகுதிகளை முழுமையாக கைப்பற்றும்? வேறு போக்கிடமில்லா ஐந்தாம் தலைமுறை தினக்கூலிகளான தாங்கள் எஸ்டேட்டிலிருந்து வெளியேற்றப்பட்டால் தங்களது எதிர்காலம் என்னவாகும்? அதன்பிறகு தாங்கள் எங்கே குடியேறப்போகிறோம்? என்பது போன்ற பேரச்சமூட்டும் விடை தெரியா வினாக்களுடன் ஒவ்வொரு நாட்களையும் கடத்தி வருகின்றனர் தற்போது அங்குள்ள தொழிலாளர்கள்
மாஞ்சோலைப் பகுதியில் சுற்றுச்சூழல், வனம், புலிகள் என பலவாறு இயற்கைப் பாதுகாப்பு குறித்து பேசும் அதே தமிழ்நாடு அரசுதான், முழுக்க மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தைக் கண்டுபிடித்த ஜான் சல்லிவன் எனும் ஆங்கிலேயரின் சிலையை ஊட்டியில் 2022ல் திறந்துவைத்து, ஊட்டி உருவாக்கப்பட்ட 200ஆம் ஆண்டினை வெகு விமர்சையாகக் கொண்டாடியது. சமூகத்தில் அதிகாரம் படைத்த பெரு/சிறு முதலாளிகள் பலரால் கைப்பற்றப்பட்டுள்ள நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் தொடர்ந்து மக்கள் குடியேற அனுமதிக்கும் அதே காரணங்கள், மாஞ்சோலையில் சொந்தமாக ஒருபிடி மண் கூட சொந்தமாக இல்லாத எளிய தொழிலாளர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போவது ஏனோ! தேயிலைத்தோட்டம் அங்கிருப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து என சில ஆண்டுகளாகத் தொடர்ந்து கூறிவரும் வனத்துறை, ஏற்கனவே தரைப்பகுதியில் அமைக்கப்பட இருந்த “பல்லுயிர் பூங்கா”வின் இடத்தை மாற்றி, எஸ்டேட்டின் மையப்பகுதியில் இருக்கும் காக்காச்சி எஸ்டேட்டில் அமைத்திட கடந்த 23.02.2023 அன்று அறிவிக்கை வெளியிட்டதையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஒரு நூற்றாண்டாய் அந்த வனத்தைப் பாதுகாத்துவரும் எம்மக்களை, முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு, புலி / யானைப் பாதுகாப்பு என்ற பெயரில் அதானி / அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் கைகளில் மாஞ்சோலை வனத்தைக் கொடுக்காமல் இருந்தால் சரி.
பதிவு : இராபர்ட் சந்திரகுமார்( Advocate Highcourt Madurai bench)
Support