திருச்செந்தூர் தானியங்கி வானிலை நிலையம்
இன்று திருச்செந்தூர் தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தை பார்வையிட்டேன். ஆதித்தனார் கல்லூரியில் அமைந்திருக்கும் இந்த தானியங்கி வானிலை ஆய்வு நிலையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டவை.
இந்திய வானிலை ஆய்வு மைய கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 63 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் உள்ளன. நமது தென் தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் பேச்சிப்பாறை உள்ளிட்ட 12 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் உள்ளது. அதில் திருச்செந்தூரும் ஒன்று.
பொதுவாக தானியங்கி வானிலை நிலையங்கள் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் மட்டுமே அமைக்கப்படும் நிலையில் திருச்செந்தூர் பகுதியில் தானியங்கி வானிலை நிலையம் அமைத்தது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
திருச்செந்தூரை பொறுத்தவரை கோடைகாலம் குளிர்காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய மூன்று பருவகாலங்களிலும் மழை பெறும் பகுதி இங்கு ஆண்டுக்கு சராசரியாக 1000 மிமீ வரை மழை பொழியும். குறிப்பாக வடகிழக்கு பருவ மழைகாலத்தில் மட்டும் சராசரியாக திருச்செந்தூர் 650 மிமீ மழையை பெறுகிறது.
இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் தானியங்கி வானிலை நிலையம் அமைய ஆதித்தனார் கல்லூரியே காரணமாக அமைந்திருக்கிறது. ஆதித்தனார் கல்லூரியில் அப்போதைய முதல்வராக இருந்த செல்வராஜ் அவர்கள் வானிலை மீது அதீத ஆர்வம் கொண்டவர். தென் தமிழக கடலோர பகுதியில் வானிலையில் அதிக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர். இவரது தீவிர முயற்சியால் 20 ஆண்டுகளுக்கு முன்பே திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் தானியங்கி வானிலை நிலையத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் அமைத்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் அமைய பெற்ற தானியங்கி வானிலை நிலையங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அப்போதே திருச்செந்தூரில் வானிலை நிலையம் அமைய பெற்றிருக்கிறது.
இந்த வானிலை ஆய்வு நிலையம் சாதாணமானது அல்ல. திருச்செந்தூர் வானிலை ஆய்வு நிலையத்தில் பதிவாகும் மழை அளவுகளை டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் தினசரி வெளியிடும். இந்திய நாட்டின் வானிலை ஆய்வு மையம் திருச்செந்தூர் தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தை தினசரி கண்காணிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம்தேதி பெருமழை பதிவான நிலையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மழையின் தீவிரத்தை பார்க்க முடிந்தது. திருச்செந்தூர் தானியங்கி வானிலை ஆய்வு நிலையம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் திருச்செந்தூரில் மழையின் தீவிரத்தை நாம் தெரிந்திருக்க முடியாதது. மேலும் இந்த தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தில் தினசரி பதிவாகும் வெப்பநிலை வளிமண்டல அழுத்தம் வெப்பநிலை மழை அளவு இவை அனைத்தையும் வைத்து சில கல்லூரி பேராசிரியர்கள் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொள்கிறார்கள். இந்த தானியங்கி வானிலையத்தின் மூலம் மிகப்பெரிய ஆராய்ச்சியே நடைபெறுகிறது.
இவ்வளவு சிறப்பு பெற்ற ஆதித்தனார் கல்லூரி தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தில் ஒரு பேராசிரியரை நியமித்து பள்ளி கல்லூரி மாணவர்களை பார்வையிட அனுமதி வழங்கலாம். இங்கு மழை அளவு வெப்பநிலை காற்று வீசும் வேகம் திசை எவ்வாறு கணக்கீடப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இதை மிக பெரிய ஆய்வு கூடமாக மாற்றி பல பள்ளி கல்லூரி மாணவர்களை பார்வையிட அழைக்கலாம்.இதை நிர்வகிக்க கல்லூரியில் இதற்கென்று ஒரு ஆசிரியரை நியமிக்கலாம். மேலும் மாணவர்களுக்கு ஆராய்ச்சியை ஊக்குவிக்க இது ஒரு நல் வாய்ப்பாக அமையும்.
-Tenkasi Weatherman
100% அவசியமானது தான்! அந்தக் கல்லூரியின் பழைய மாணவரான நமது தென்காசி weatherman T.ராஜா அப்பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார். தயவுசெய்து கல்லூரி நிர்வாகம் இதனைப் பரிசீலிக்க வேண்டும்.