Back
artical-details

தமிழக வானிலை கடந்து வந்த பாதை -2024

  • date : 2025-01-01
  • Category : Environmental Awareness

தமிழக வானிலையும் காலநிலையும் குறித்த ஓர் ஆய்வு -2024 கடந்து வந்த பாதை 

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மிக சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆண்டு மழை பொழிவுகளை கணக்கீடும் போது 30 மாவட்டங்கள் 1000 மிமீக்கு மேல் மழை பெற்றிருக்கிறது. இனி ஒவ்வொரு பருவ கால வாரியாக தமிழகம் பெற்ற மழை அளவை விரிவாக அலசுவோம். 

குளிர்கால மழை -2024 

தமிழகத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்கள் குளிர்காலமாகும். இந்த காலத்தில் தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் கடலோர பகுதிகளே அதிகமழை பெறும். குளிர் காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழையை பெற்றுள்ள பகுதி நாலுமுக்கு ஆகும். நெல்லை மாவட்டம் நாலுமுக்கு ஊத்து காக்காச்சி மாஞ்சோலை ஆகிய இடங்கள் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில்  இந்தியாவிலேயே அதிகமழையை பெற்றிருக்கிறது.

 நாலுமுக்கு 584 மிமீ மழையும் ஊத்து 507 மிமீ மழையும் காக்காச்சி 486 மிமீ மழையும் மாஞ்சோலை 412 மிமீ மழையையும் பெற்றிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழகமும் இந்த காலத்தில் 59 மிமீ மழையை சராசரியாக பெற்றுள்ளது. 


கோடைகாலமழை -2024 

மார்ச் முதல் மே வரையிலான காலகட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலமாகும். இந்த காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழையை கன்னியாகுமரி  மாவட்டம் பெற்றுள்ளது. குமரி மாவட்டம் கோடைகாலமழைக்கு சிறப்பு பெற்றது. கோடைகாலத்தில் தமிழகம் சராசரியாக 139 மிமீ மழையை பெற்றுள்ளது. 

தென் மேற்கு பருவமழை -2024 

தென் மேற்கு பருவமழை காலத்தில் அனைத்து மேற்கு தொடர்ச்சி மலைகளும் நல் மழை பெய்தாலும் கோவை நீலகிரி மாவட்டங்களே இந்த காலத்தில் அதிகமழையை பெறும். தென் மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே அதிகமழையை மேகாலாயா மாநிலம் சிரபுஞ்சி மௌசின்ராம் பெறும். தமிழக அளவில் மிக அதிகமான மழையை கோவை மாவட்டம் சின்னகல்லாறு 4111 மிமீ மழையை இக்காலத்தில் பெற்றுள்ளது. 

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சின்னகல்லாறு 4111 மிமீ மழையும் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி 3611 மிமீ மழையும் பெற்றுள்ளது. நீலகிரி பந்தலூர் 3510 மிமீ மழையும் தேவாலா 3328 மிமீ மழையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகம் சராசரியாக 402 மிமீ மழையை இக்காலத்தில் பெற்றிருக்கிறது. 

வடகிழக்கு பருவமழை -2024 

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் சராசரியாக 623 மிமீ மழையை பெற்றுள்ளது. இந்த காலத்தில் தூத்துக்குடி நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களும் இயல்பை விட மிக அதிகமழையை பெற்றிருக்கிறது. 

வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் ஊத்து 2640 மிமீ மழையை பெற்றிருக்கிறது நாலுமுக்கு 2227 மிமீ மழையும் காக்காச்சி 1972 மிமீ மழையும் மாஞ்சோலை 1524 மிமீ மழையும் பெற்றுள்ளது. அதே போல தமிழ்நாட்டில் விழுப்புரம் 1443 மிமீ மழையை இக்காலத்தில் பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் இயல்பை விட அதிக மழையை பெற்று வருவது குறிப்பிடதக்கது. 

Note : தமிழகத்தில் இன்னும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவில்லை. 

ஆண்டு மழைப்பொழிவு 2024

தமிழகத்தில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 30 மாவட்டங்கள் 1000 மிமீக்கு மேல் மழையை பெற்றிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் 2152 மிமீ மழையை பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றிருக்கிறது. 

மிக மிக அதிகமழையை பெற்ற மாவட்டங்கள் (1500 மிமீக்கு மேல்)

தமிழகத்தில் கோயம்புத்தூர் சென்னை நாகப்பட்டினம் விழுப்புரம் திருநெல்வேலி திருவள்ளூர் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்கள் சராசரியாக 1500 மிமீக்கு மேல் உச்சகட்ட மழையை பெற்றிருக்கிறது.

அதிக மழையை பெற்ற மாவட்டங்கள் ( 1000-1500 மிமீ)

செங்கல்பட்டு மயிலாடுதுறை திருவாரூர் கடலூர் காஞ்சிபுரம் இராணிப்பேட்டை திண்டுக்கல் திருவண்ணாமலை சேலம் தஞ்சாவூர் சிவகங்கை வேலூர் கள்ளக்குறிச்சி தேனி தர்மபுரி திருப்பத்தூர் தென்காசி அரியலூர் கிருஷ்ணகிரி புதுக்கோட்டை மதுரை இராமநாதபுரம் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் 1000 மிமீக்கு மேல் மழையை பெற்றுள்ளது. 

மிதமான மழையை பெற்ற மாவட்டங்கள் (800-1000 மிமீ)

திருச்சி நாமக்கல் பெரம்பலூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் 800 மிமீ முதல் 1000 மிமீ வரை மழையை பெற்றிருக்கிறது. 

மிக மிக குறைவான மழையை பெற்ற மாவட்டங்கள் 

கரூர் ஈரோடு தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்கள் 800 மிமீக்கும் குறைவான மழையை பெற்றிருக்கிறது. வடகிழக்கு பருவமழையும் சரிவர பெய்யாமல் இருந்திருந்தால்  தூத்துக்குடி மாவட்டம் வறண்ட மாவட்டமாக இருந்திருக்கும். 

வானிலை ஆராய்ச்சியாளர் என்ற முறையில் ஒரு சில கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன். 

நமது மாநிலத்தில் வானிலையே மேலும் வலுப்படுத்த வேண்டும். தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் தென்மாவட்டங்களில் ரேடார் அமைக்கப்படுதல் வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை நமது வானிலை பக்கத்தின் சார்பில் துல்லியமான அறிவிப்புகளை நாம் வெளியிட்டிருந்தாலும் வானிலையை கணிப்பது எனக்கு சவாலாகவே இருந்தது.

அதிகமழை பெய்த மாவட்டங்களில் கூட மக்கள் இந்த மழை குறைவு என்றே கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவெனில் தமிழகத்தில் மழை பெய்யும் நாட்கள் குறைந்திருக்கிறது. ஆனால்  பெய்யும் ஒரு சில நாட்களில் வலுவான மழை கொட்டியுள்ளது. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ,இராமேஷ்வரம் மாஞ்சோலை தென்காசி ஆகிய இடங்களில் ஒரே நாளில் பெருமழை பதிவானது. ஊத்தங்கரை மாஞ்சோலையில் ஒரே நாளில் 500 மிமீ மேல் மழை பதிவானது. 

இனி வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடரும். மழை பெய்யும் நாட்கள் குறைந்து பெய்யும் நாட்களில் மழை கொட்டி தீர்க்கும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் இனி ஒவ்வொரு பருவமழையின் போது எதிரொலிக்கும்.தமிழக மக்களின் ஆதரவுடன் நம் சேவை மென்மேலும் தொடரும்.

வரும் 2025 ம் ஆண்டும் தமிழகம்  நல்ல மழை பெறும் என்று நம்புவோம். 

-Tenkasi Weatherman.

Write Reviews

2 reviews

  • Govintharaj G
    3 months & 3 days ago

    2024 ஆம் ஆண்டு எல்லா பருவநிலை காலத்தை தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

    Admin Reply

  • Govintharaj G
    3 months & 3 days ago

    2024 ஆம் ஆண்டு எல்லா பருவநிலை காலத்தை தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

    Admin Reply