Back
artical-details

எச்சரிக்கும் கடல்நீர்மட்டம் உயர்வு

  • date : 2025-01-17
  • Category : Environmental Awareness

திருச்செந்தூர் காலநிலை மாற்றம் தரும் எச்சரிக்கை 

கடந்த 1 மாதத்திற்கு மேலாக திருச்செந்தூர் கடற்கரை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. திருச்செந்தூர் மட்டும் அல்லாமல் இராமேஷ்வரம் முதல் குமரி வரை அனைத்து தென் கடலோர பகுதிகளிலும் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. இன்று காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆகிய தென் கடலோர பகுதியை பார்வையிட்டேன். அதை பார்க்கும் போது கடல் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது தெரிகிறது. இதற்கு முக்கியமான காரணம் காலநிலை மாற்றமே . 

காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

பருவநிலை மாற்றம் வேறு காலநிலை மாற்றம் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை  தென்மேற்கு பருவமழையும், அக்டோபர்  முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்  வடகிழக்கு பருவ மழையும் பொழிய வேண்டும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில மாதங்கள் முன் பின்னாக மாற்றி வருவது பருவநிலை மாற்றம் ஆகும்.

குறிப்பாக குற்றாலம் அருவிகளில் சீசன் நேரங்களில் அருவிகள் வறண்டு காணப்படுவதும், சீசன் அல்லாத நேரங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது பருவநிலை மாற்றம் ஆகும். 

காலநிலை மாற்றம் என்பது பூமியில் நீண்ட காலத்தில் ஏற்படும் சீதோசன மாற்றமாகும். பூமியின் வெப்பநிலை, மழைப்பொழிவு போன்ற சராசரி நிலைகளில் நீண்ட காலத்திற்கு ஏற்படும் மாற்றமாகும். இது உலகளாவியதாக இருக்கலாம். பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமான வானிலை மாற்றங்களும் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகி அதன் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

உலக வானிலை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2013 - 2022-க்கிடையில் கடல் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 4.5 மில்லி மீட்டர் உயர்ந்திருக்கிறது. முன்னதாக 1901 - 1971-க்கிடையில் ஆண்டுக்கு சராசரியாக 1.3 மிமீ கடல் மட்ட உயர்வு இருந்தது. இது 1971 - 2006-க்கிடையில் ஆண்டுக்கு 1.9 மி.மீ ஆகவும், 2006 - 2018-க்கிடையில் ஆண்டுக்கு 3.7 மி.மீ ஆகவும் அதிகரித்தது. 1901 - 1971-க்கிடையில் நடந்ததை ஒப்பிடும்போது 2013 - 2022-ல் மூன்று மடங்கு அதிகமாக கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் 991 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ள நிலையில் இதில் 423 கிலோ மீட்டர் அதாவது 42.7% அரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் கடல் நீர்மட்டம் ஏன் உயர்கிறது?

கடல் மட்ட உயர்வு என்பது பூமியின் பெருங்கடல்களின் நீர்மட்டத்தின் சராசரி அதிகரிப்பைக் குறிக்கிறது. வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை அதிகரித்த மனித நடவடிக்கைகளால் புவி வெப்பமடைதல் காரணமாக கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் அதிகரித்துள்ளது 
உலகில் எந்த நாடும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இல்லை, 

தொழிற்சாலைகள் மட்டுமில்லாமல், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்பதனப் பெட்டிகள் போன்றவை கிரகிக்கும் கூடுதல் மின்சாரத்தாலும் இது நடக்கிறது. மின்சாரம் தயாரிக்கப்படும் முறை காரணமாகக் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியேறுகின்றன.மனிதச் செயல்பாடுகளால் வெளியாகும் இத்தகைய வாயுக்களில் 50 சத வீதம் கடலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், கடல் கிரகிக்கும் அளவைவிட பல மடங்கு கார்பன் டை ஆக்சைடு தற்போது உற்பத்தியாகிறது. அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் தண்ணீர் வெப்பமடைந்து விரிவடைகிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனே பூமி அளவு கடந்து வெப்பமடையவும் காரணமாக இருக்கின்றன.

கடுமையான வெப்ப அதிகரிப்பால் கடல் மட்டம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மனித வரலாற்றில் முதன்முறையாக அண்டார்ட்டிகா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளும் உருகிவருகின்றன. அவை உருகிக் கடலில் சேர்வதாலும் கடல் மட்டம் கூடுதலாக உயர்கிறது

கடல் நீர்மட்ட உயர்வு நாம் என்ன செய்ய வேண்டும்?
 

காலநிலை மாற்றத்தால் கடலோரப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தைத் தடுக்க, தனிநபர்கள், அரசாங்கங்கள், வணிகங்கள் ஆகியோர் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.
காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை எதிர்க்கவும் மரங்களை நடுவது  பயனுள்ள வழியாகும். உங்கள் வீடு, பள்ளிகள், அலுவலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் மரங்களை நடவும். உங்கள் வாழ்நாளில் ஒரு மரத்தை நட்டாலும், அது சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.


சூரிய, காற்று, நீர் மற்றும் புவிவெப்ப ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவது புவி வெப்பமடைவதைக் குறைக்கும்.பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்
காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், இந்த பாதிப்பைக் குறைக்கலாம். 

சுற்றுச்சூழல் கல்விக்கு ஆதரவு
பருவநிலை மாற்றத்தைக் குறைக்க சுற்றுச்சூழல் கல்வி அவசியம். குழந்தைகள் தான் எதிர்காலம், அவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைக் கற்பிப்பது நமது பொறுப்பு.  தனிநபர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளையும் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள கல்வி உதவுகிறது. 


கடல் மட்ட உயர்வு     கடல் நீர் ஊருக்குள் புகுதல், நிலத்தடி நீர் உப்புத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவே அரசானது கடலோர மக்களுக்கு தூய்மையான நன்னீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவதாக, மீன் உற்பத்தியிலும் சரிவை ஏற்படுத்துகிறது. 

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்குவதற்கான நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.


தமிழக மக்கள் அனைவரும் இயற்கையை பாதுகாக்க ஏதேனும் ஒரு சுற்று சூழல் இயக்கத்தில் கட்டாயம் இணைய வேண்டும். கடல் பாதுகாப்பு ,மரங்கள் நடுதல், இயற்கையை தூய்மையாக்குதல் நீர் பாதுகாப்பு நீர் மேலாண்மை உள்ளிட்ட சுற்று சூழல் சார்ந்த பல்வேறு இயக்கங்கள் நம் நாட்டில் இருக்கிறது. தங்களுக்கு எது விருப்பமோ அந்த இயக்கங்களில் இணைந்து சுற்று சூழல் சார்ந்த பணிகளை மேற்கொள்வது பயன் அளிக்கும்.
நமது இயற்கையைக் காப்பதும், நேசிப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை. 

இந்த அழகான உலகத்தை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம் .ஒருநாள் திரும்பிச் செல்லத்தான் போகிறோம்.தேதிகள் மட்டுமே ரகசியம் எனவே நல்ல இயற்கையை விட்டு செல்வோம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக.

-Tenkasi Weatherman.

Write Reviews

4 reviews

  • Arunkumar
    2 months & 18 days ago

    சிறப்பு அண்ணா... கடைசியில் உருவான மனித மிருகம் இந்த உலககத்தை அழிக்கிறது

    Admin Reply

  • புங்கராஜ
    2 months & 18 days ago

    Thanks

    Admin Reply

  • Manoj kumar
    2 months & 18 days ago

    அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருந்தது... அருமை.. அனைவரும் இயற்கை யை பாதுகாக்க வேண்டும்..அனைத்து நாட்டு அரசுகளும் தொழில் வளர்ச்சிக்கும் வணிகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியாவது இயற்கை யை பாதுகாக்க கொடுக்க வேண்டும்..

    Admin Reply

  • Krishna Kumar
    2 months & 18 days ago

    Climate change is not the only cause of sea erosion near Tiruchendur Temple, the main reason is the bait curve laid in Tiruchendur Amali Nagar area.

    Admin Reply