மேற்கு தொடர்ச்சி மலையை அச்சுறுத்தும் தென்காசி சுரங்க வழி சாலை திட்டம். செங்கோட்டை மலையை குடைந்து 10 கிமீ தூரத்துக்கு சுரங்க வழி சாலை. வளர்ச்சி என்ற பெயரில் பருவமழையை இழந்து மழை மறைவு பிரதேசமாக மாறுகிறதா செங்கோட்டை ?
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செங்கோட்டை கணவாய் வழியாக நீண்ட சுரங்க பாதை அமைக்க தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை முதல் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் எடமன் வரையில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தால் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த வழித்தடமானது, பாரத்மாலா திட்டத்தின் கீழ் உள்ள புளியரை –ஆரியங்காவு–எடமண் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இது தமிழ்நாட்டிற்கும் கேரளக் கடற்கரைக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், NH-744 (கொல்லம்–மதுரை) சாலையை NH-66 சாலையுடன் இணைத்து, மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக ஒரு முக்கிய கிழக்கு-மேற்கு சரக்குப் பாதையை உருவாக்கும்.
முழு வழித்தடமும் 61.7 கி.மீ. தூரத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரைக்கும் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எடமண் பகுதிக்கும் இடையே உள்ள 23 கி.மீ. நீளமுள்ள பகுதியான தொகுப்பு-1 தான் மிகவும் சூழலியல் உணர்திறன் மிக்க பகுதியாகும்.
இருப்பினும், ஆரியங்காவு கணவாய் ஏற்கனவே NH-744 மற்றும் கொல்லம்–செங்கோட்டை ரயில் பாதை உள்ளிட்ட போக்குவரத்தும் உள்ளது
செங்குத்தான நிலப்பரப்பைக் கடந்து செல்ல, இந்தத் திட்டம் நான்கு வழி நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களுக்காக நான்கு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செங்கோட்டை கணவாய் வழியாக அமைக்கப்படும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 5100 கோடி. இத்திட்டத்திற்கு 210 எக்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 48 எக்டர் காப்புக்காடுகளாகும். இதில் நான்கு இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளன. வடக்குப் பகுதியில் அமையவுள்ள சுரங்கம் 10.179 கி.மீ. நீளத்திற்கும், தெற்குப் பகுதியில் அமையவுள்ள சுரங்கம் 10.103 கி.மீ. நீளத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுரங்கமும் 11 மீட்டர் உயரம் கொண்டது. ஆரியங்காவு வழிவே பயணிக்கும் புளியரை முதல் எடமன் வரையிலான 22.866 கி.மீ. சாலையில் 18.96 கி.மீ கேரளாவிலும் 3.906 கி.மீ. சாலை தமிழ்நாட்டிலும் வருகிறது.
இச்சாலை அமைந்தால் இதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்போகும் முதல் சுரங்கச்சாலையாக இருக்கும். ரயில் பாதைக்கும், நீர்மின் திட்டங்களுக்கும் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகின் பாராம்பரிய சின்னமாக கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலை அழியும் அபாயம் :
முன்மொழியப்பட்ட இந்த வழித்தடம், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்கிறது. இது இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு இயற்கையான பாதையை உருவாக்குகிறது. இப்பகுதி அகத்தியமலை நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ளது. இங்குள்ள காடுகள், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் செந்துரணி வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளை இணைக்கின்றன. இவை பெரியார் புலிகள் காப்பகம், பெப்பாறை மற்றும் நெய்யார் வனவிலங்கு சரணாலயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பெரியார் மற்றும் செந்துர்ணிக்கு இடையேயான வழித்தடம், புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நீண்டகால இடப்பெயர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலப்பரப்பு, 2,100 சதுர கி.மீ.க்கும் அதிகமான வாழ்விடப் பரப்பில் சுமார் 36 முதல் 40 புலிகளுக்கு ஆதரவளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள 5432.72 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அகத்தியமலை உயிர்மண்டலக் காப்பாகமாக மத்திய அரசு 2001ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இவற்றிற்கு எல்லாம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்திட்டத்திற்கான 23,500 மரங்கள் வெட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி குண்டாறு அடவிநயினார் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பகுதியில் இத்தனை மரங்களை வெட்டுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மழை வளம் குறையும் : தென் மாவட்டங்களை பொறுத்தவரை செங்கோட்டை கணவாய் மிக முக்கியமானது. இந்த கணவாய் வழியாகதான் தமிழகம் கேரளம் அதிக மழை பெற காரணமாகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவகாற்றின் மூலம் இக்கணவாய் வழியாக உள் நுழையும் மேகங்களால் தான் குற்றால சீசனே உருவாகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இக்கணவாய் வழியாகவே மழை மேகங்கள் செல்கிறது. குறிப்பு : வடகிழக்கு பருவமழை காலத்தில் கேரளாவில் அதிகமழை பெறும் பகுதி புனலூர். இதற்கு மிக முக்கிய காரணம் இந்த செங்கோட்டை கணவாய் பகுதியே ஆகும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலங்களில் செங்கோட்டை கணவாய் வழியாக ஈரப்பதம்மிக்க தென்மேற்கு பருவகாற்று வீசும் இதனால் நெல்லை தூத்துக்குடி மாவட்டமே குளு குளு சூழல் நிலவும்.
இந்த இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் இந்த செங்கோட்டை கணவாய் ஆண்டுக்கு 2500 மிமீக்கு மேல் மழை பொழிகிறது. மிக சிறப்பு வாய்ந்த இந்த கணவாய் பகுதிகளில் மரங்களை அழிப்பதோ சுரங்கபாதைகளை அமைப்பதோ இயற்கைக்கு கேடு விளைக்கும். பருவமழையையும் நாம் இழக்க நேரிடும். எனவே செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு வனதுறை அனுமதி அளிக்க கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன்.
-Tenkasi Weatherman.