கடல் மட்டத்திலிருந்து, 2,133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, மலைகளின் இளவரசியான கொடைக்கானல். கொடிகளின் காடு, கோடைக்கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல அர்த்தங்கள், கொடைக்கானல் என்ற பெயருக்கு உண்டு. வழியெங்கும் கொண்டை ஊசி வளைவுகள், அடர்ந்த வனம், பழமையான மரங்கள், வன உயிரினங்கள் என, சுற்றுலாவாசிகளின் கண்களை குளுமைப்படுத்தும் கொடைக்கானல்.
வெள்ளி நீர்வீழ்ச்சி
கொடைக்கானலில் இருந்து, 8 கி.மீ., தொலைவில், வெள்ளி நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. 180 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி, பார்ப்பதற்கு அற்புத அனுபவத்தை தரும். இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் ஏரி அமைந்துள்ளது. 1863ல், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரால், செயற்கையாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. 111 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய, சுற்றுலா துறையின் சார்பில் படகுகள் விடப்பட்டுள்ளன.
ஊசியிலை காடுகள்
கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில், 1906ம் ஆண்டு இந்த காடு உருவாக்கப்பட்டது. ஊசியிலை காட்டுக்குள், குளிரை அனுபவித்தவாரே மெல்ல நடைபோடுவது, மனதிற்கு இனம் புரியாத மகிழ்ச்சியை தரும்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில்
இங்கு பிரசித்தி பெற்ற கார்த்திகேய குறிஞ்சி என்று அழைக்கப்படும், முருகன் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி பூ இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் பூக்கிறது. இது, கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பிரயண்ட் பூங்கா
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் பிரயண்ட் பூங்கா அமைந்துள்ளது. 1908ம் ஆண்டு, எச்.டி.பிரயண்ட் என்பவரால், 20.5 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது.
இந்த பூங்காவில், 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இந்த பூங்காவில் உள்ள சிறப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தோட்டக்கலை துறை சார்பில், மலர் கண்காட்சி நடைபெறும். காலை 9:00 மணியிலிருந்து, 6:00 மணி வரை மட்டுமே, பூங்காவினுள் அனுமதி உள்ளது. பூங்காவை பார்வையிடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேகத்தின் மீது நடைபயணம்
கடந்த 1872ம் ஆண்டு கோக்கர் என்பரால் உருவாக்கப்பட்டது, கோக்கர்ஸ் நடைபாதை.
1 கி.மீ., தூரமுடைய இந்த நடைபாதையில் இருந்து மதுரை, பெரியகுளம், டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம. வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதையில் நடக்கும் போது சில நேரங்களில் உங்கள் நிழலை வானில் மிதக்கும் மேகங்களின் மீது காணமுடியும் என்பது இதன் சிறப்பாகும்.
செண்பகனூர் அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம், 1895ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு, 500க்கும் மேற்பட்ட விலங்குள், பூக்கள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகளின் மாதிரிகள் உள்ளன. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
குணா குகை
பிசாசின் சமையலறை என்று அழைக்கப்பட்ட இந்த குகை, கமல்ஹாசன் நடித்த குணா படம் வெளியான பிறகு, குணா குகை என்றழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள், குகையை சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்கொலை முனை
கொடைக்கானல் , பேருந்து நிலையத்தில் இருந்து 3.5 கி.மீ., தொலைவில் கோல்ப் மைதானம் அருகே இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் உயரம், 1,500 மீட்டர் மேக மூட்டங்கள் குறைவாக இருந்தால், இந்த பள்ளத்தாக்கில் இருந்து, வைகை அணையை காணலாம். இந்த பள்ளத்தாக்கில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால், இதற்கு தற்கொலை பள்ளத்தாக்கு என்கிற பெயர் உள்ளது.
டால்பின் மூக்கு
பாம்பர் பாலத்தின் அருகே, டால்பின் மூக்கு பகுதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் பார்த்தால் பெரிய பாறை ஒன்று டால்பின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கிழே 6,600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது.
பழநி
கொடைக்கானலில் இருந்து. 64 கி.மீ., தொலைவில் பழநி மலை உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழநி தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. கொடைக்கானல் சுற்றுலா வருவோர், அங்கிருந்து பேருந்தில் பழநிக்கு எளிதில் செல்லலாம்.
ஆதிவாசிகளின் வாழ்விடம்
கொடைக்கானலில் இருந்து, 40 கி.மீ., தொலைவில், குக்கால் குகை உள்ளது. சுற்றுலா பயணிகள், அதிகம் பேர் இந்த குகைக்கு செல்லாததால், இன்னும் இயற்கை மாறாமல் பொலிவுடன் உள்ளது. இந்த குகை அருகில் உள்ள நீர்வீழ்ச்சியும், மாசுபடாமல் உள்ளது. இந்த பகுதியில் ஆதிவாசிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணக்கிடக்கின்றன.
குள்ள மனிதர்களின் வாழ்விடம்
கொடைக்கானலில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் டால்மன் சர்க்கிள் பகுதி உள்ளது. இங்க குள்ள மனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. தற்போதும், தாண்டிக்குடி, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் குள்ள மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
டெலஸ்கோப் இல்லம்
சுற்றுலா பயணிகள் டெலஸ்கோப் இல்லத்தில் இருந்து கொடைக்கானலின் பசுமை வீடுகள், சமவெளிகள், அருகிலுள்ள நகரங்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் தலையர் நீர்வீழ்ச்சி, வானிலை ஆய்வுக்கூடம், தூண் பாறைகள், கோல்ப் மைதானம் என, பார்க்க ஏகப்பட்ட இடங்களை வைத்திருக்கிறது கொடைக்கானல்.