தென்காசி மாவட்டம் மேக்கரைக்கு மிக அருகே கும்பவுருட்டி அருவி இயற்கை அழகுடன் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது.
கேரள எல்லைக்குட்பட்ட அச்சன்கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது கும்பாவுருட்டி அருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவிக்கு மேக்கரை சோதனை சாவடி அருகில் அமைந்துள்ள மணலாறு வழியாக செல்ல வேண்டும். செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
அடந்த வனப்பகுதிக்குள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் காணப்படும் கும்பாவுருட்டி அருவியின் அழகை காணவும், ஆனந்தமாக குளியல் போடவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.
கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சற்று கவனமாக ஓட்டிச் செல்ல வேண்டும்.
குற்றாலத்திலிருந்து 29கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. தென்காசி-அச்சன்கோவில் இடையே தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இதன் மூலமும் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லலாம்.
கும்பாவுருட்டி அருவி கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு பின்பற்ற வேண்டிய விதிகள் அதிகம். ஒரு நபருக்கான நுழைவு கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி விட்டு, பிரதான சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பி காட்டிற்குள் நடந்து சென்றால் இந்த அருவியை பார்க்கலாம். சற்று தொலைவு தான் என்றாலும் அருவியை கண்டவுடன் கிடைக்கும் அந்த புத்துணர்வு களைப்பை போக்கி விடும். அருவியை மிகச் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். வார நாட்களில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும், அதிக நேரம் குளிக்கலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற அருவி.