இயற்கை காதலர்களின் சொர்க்கபுரி மாஞ்சோலை சொர்க்கத்திற்கு பயணம்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகால் திருநெல்வேலி மாவட்டம் மிக பிரபலமாக அறியப் படுகிறது
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஆனைமலை, ஏலகிரி போன்ற பல மலைப் பிரதேசங்கள் சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டிருந்தாலும் பெரும்பாலோரின் பார்வையில் இருந்து சற்று விலகி பசுமை போர்த்திய சொர்க்கமாக திகழ்வது மாஞ்சோலை. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தாலும் சில்லென்ற சீதோஷனம் உங்களை மூழ்கடிக்கச் செய்துவிடும்.
மூலிகைகளும், மலைகளும் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பாபநாசம், தென்காசி, குற்றாலம் ஆகிய சிறப்பு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களாகும்.
திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.
எங்கே உள்ளது ?
இந்த மலைவாழ் கிராமம் திருநெல்வேலி டவுனில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மாஞ்சோலைக்கு காரில் செல்வது நல்லது ஏனென்றால் வழியெல்லாம் மழை பொழியும், மேலே பெரிய வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை. திருநெல்வேலி -மாஞ்சோலை 57 கிமீ. மாஞ்சோலை -ஊத்து வழி குதிரைவெட்டி 17கிமீ. பல கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி செல்வதால் திருநெல்வேலி To மாஞ்சோலை பயண நேரம் 3.30 மணி நேரம் ஆகும். மாஞ்சோலை -ஊத்து செல்ல 17கிமீதான் ஆனால் 1.30 மணி நேரம் பயண நேரம் ஆகும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ளது இந்த சொர்க்க பூமியான மாஞ்சோலை. தரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கும் இதற்கு மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு, மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம் உள்ளிட்டவை உள்ளது.
வாழ்வில் ஒருமுறையேனும் மாஞ்சோலையை பாருங்கள் பிரம்பிப்படைவீர்கள்
மாஞ்சோலை செல்வது எப்படி:
மாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்கள் பசுமை போர்த்தி மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதன் அழகை வார்த்தையால் சொல்ல முடியாது
இங்கு செல்ல வேண்டுமானால், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மணிமுத்தாறு சுங்கச்சாவடியில் உரிய கட்டணத்தை செலுத்தி செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு மாஞ்சோலை செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக 2018 ம் ஆண்டு ரூ1000 வசூலிக்கப்பட்டு வந்தது .தற்போது அந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மலை சுற்றுலா தளங்களை போல யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. அந்தளவு கட்டுப்பாடு முறைகள் உள்ளது. இரு சக்கர வாகனத்திற்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டே பேருந்துகள் தான் மாஞ்சோலை குதிரை வெட்டி ,ஊத்து வரை செல்லும். ஆனால் அரசு பேருந்தில் செல்ல அனுமதி இல்லை.
கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி மலை ஏற ஆரம்பித்ததும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தையும், அருவியையும் தாண்டி மாஞ்சோலை செல்ல வேண்டும். இங்கு அருவி மிக முக்கியமான இடம். பளிங்கு போன்ற சுத்தமான நீரை இங்கு காண முடியும். சொர்க்கத்தின் தேனாறு, பாலாறு எல்லாம் தோற்றுவிடும் இந்த நீருக்கு முன்னால்.அருவிக்கு மேல் பயணித்தால் மாஞ்சோலை. சுட்டெரிக்கும் வெயில் மெல்ல மெல்ல தணிந்து, குளிர் காற்று நம் தேகத்தைத் தழுவுவதை உணர முடியும்.அதுவரை கிடைக்கும் செல்போன் டவர் தடுமாறி மெல்ல உயிரிழந்து விடும். இயற்கை உலகிற்கு நுழைந்துவிட்டோம் என்பதற்கு அதுதான் முதற் சமிக்ஞை. அதன்பிறகு செல்ஃபோன் நச்சரிப்புக்கு பதில் நம் காதுகளுக்கு சில்வண்டுகளின் ஓசைதான் கேட்கும்.
மாஞ்சோலையில் இரவு தங்க அனுமதி இல்லை. மாலை 6 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும்.
அதிகமான மழையை பெறும் மாஞ்சோலை
வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே அதிக மழை பெறும் பகுதி மாஞ்சோலை என்று உங்களுக்கு நாம் தெரிவித்திருக்கிறோம். மற்றொரு சிறப்பு என்னவென்றால் குளிர்காலத்திலும் இந்தியாவில் அதிகமான மழையை மாஞ்சோலை தான் பெறுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைகாலத்திலும் ஜனவரி பிப்ரவரி ஆகிய குளிர்காலத்திலும் நம் நாட்டிலேயே அதிகமான மழையை மாஞ்சோலை தான் பெறுகிறது.
மாஞ்சோலை தமிழகத்திற்கு கிடைத்த வரம்?
இந்தியாவில் எந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கும் இல்லாத சிறப்பு மாஞ்சோலைக்கு உள்ளது. இந்தியாவில் அனைத்து மேற்கு தொடர்ச்சி மலைகளும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பெய்யும் போது மாஞ்சோலை மட்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் உச்சகட்ட மழை பெய்வது இயற்கையின் அதிசயமே..........
மணிமுத்தாறு - மாஞ்சோலை இந்த பாதை முழுவதும் உள்ள மரங்கள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் ஒரு ரம்மியமான அனுபவம்! மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டுமன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாஞ்சோலை இங்கே நிலவும் அழகிய வானிலை உங்களைத் தொட்டுச் செல்லும் மேகங்கள் ,தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த இந்த மாஞ்சோலையில் நீங்கள் சென்று வாருங்கள் இதன் அழகில் நீங்கள் உங்களை தொலைப்பது உறுதி.