Back
temple-details

வடகிழக்கு பருவமழை சிறப்பு வானிலை அறிக்கை

  • time : 2024-10-08

தமிழக  கடலோர மாவட்டங்களில் அதிக மழையை தர இருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. 

கடந்த ஆண்டு நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டி போட்டது வடகிழக்கு பருவழை. தற்போது இந்தாண்டு பருவமழை குறித்த விரிவான ஆய்வுகளை காணலாம்.

 

வடகிழக்கு பருவமழை என்றால் என்ன?
தென்மேற்கு பருவமழை காலத்தில் ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையை கொடுத்த பின்னர் இமயமலை மேல் மோதி திரும்புவதால் இதை பின்னடையும் பருவகாற்று என்று அழைப்போம். தென்மேற்கு பருவமழை கால முடிவடைந்த பின்னரே வடகிழக்கு பருவமழை காலம் துவங்க சாதகமான சூழல் நிலவும். அதாவது சைபீரிய பகுதியில் நிலவும் உயர் அழுத்தத்தின் காரணமாக தெற்கு நோக்கி காற்று வீச ஆரம்பிக்கும். வடகிழக்கு திசையிலிருந்து வீசும் இக்காற்றானது வங்ககடலை அடையும் போது ஈரப்பதத்தை பெற்று தமிழகத்திற்கு அதிக மழையை தருகிறது .

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கும் போது தமிழகம் மட்டுமே வடகிழக்கு பருவமழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு மழைப் பொழிவில் 50-60% மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறுகிறது .அந்தளவு சிறப்பு பெற்ற மழை காலமாக திகழ்கிறது.குறிப்பாக தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் ஆண்டு மழைப்பொழிவில் 80 % மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறுகிறது. 

வடகிழக்கு பருவமழையை தீர்மானிக்கும் சக்திகள் எவை? இந்தாண்டு பருவமழை எப்படி இருக்கும் ? 

எல்நினோ லநினோ நடுநிலை இருமுனை நிகழ்வு மேடன்ஜூலியன் அலைவு இந்த காரணிகளை பொறுத்தே வடகிழக்கு பருவமழை அமையும். இந்தாண்டு லாநினோ ஆண்டாக அமைகிறது. 

எல்நினோ :   மேற்கு பசுபிக் பெருங்கடலை விட  கிழக்கு பசுபிக் பெருங்டலில் மூன்று மாத சராசரி கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரித்திருந்தால் அதை எல்நினோ என்கிறோம். எல்நினோ உருவானால் தமிழகம் இயல்பை விட மிக அதிகம் மழையை பெறும்

லாநினோ  : பசுபிக் பெருங்கடலின் சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் போது அதை லாநினோ என்கிறோம்.

இருமுனை நிகழ்வு :

Positive IOD (indian ocean dipole) -மேற்கு இந்திய கடல் வெப்பநிலையானது 0.4°க்கு மேல் அதிகம் இருந்தால் இதை நேர்மறை இருமுனை நிகழ்வு என்று அழைப்போம்.


Negative IOD :  மேற்கு இந்திய பெருங்கடலில் வெப்பநிலை குறையும் போது அதை எதிர்மறை இருமுனை நிகழ்வு என்றழைப்போம். அதாவது கிழக்கு இந்திய பெருங்கடல் வெப்பமாகவும் மேற்கு இந்திய பெருங்கடல் வெப்பம் குறைவாகவும் இருக்கும்.
இந்தாண்டு நடுநிலை  இருமுனை நிகழ்வு உருவாகியுள்ளது.


மேடன் ஜூலியன் அலைவு :
இந்திய பெருங்கடலில் இருந்து கிழக்கு பசுபிக் பெருங்கடலுக்கு இந்த அலைவானது நகர்ந்து செல்லும். இது ஓரிடத்தில் இருக்காது .மணிக்கு 29 கிமீ வரை நகர்ந்து கொண்டே இருக்கும். 
மேடன் ஜூலியன் அலைவை 8 நிலைகளாக பிரிக்கலாம்.நமது மேற்கு இந்திய பெருங்கடல்  நிலை 2 ,கிழக்கு இந்திய பெருங்கடல் நிலை 3. மேடன் ஜூலியன் அலைவானது நிலை 2 மற்றும் 3க்கு வரும் போது தமிழகம் நல்ல மழையை பெறும்.
 
தமிழக கடல் பரப்பு வெப்பநிலை:

தற்போது வங்ககடலின் வெப்பநிலை 29° C ஆக உள்ளது. தென்மாவட்டங்களை ஒட்டிய மன்னார் வளைகுடா குமரி  கடல் பகுதியின் வெப்பநிலை 28°C ஆக உள்ளது.

வடகிழக்கு பருவமழை சராசரியாக அக்டோபர் 20ம் தேதி துவங்கும். அக்டோபர் 20ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது ஒரு வாரத்திற்கு பின்போ மழை துவங்கினால் நாம் வடகிழக்கு பருவமழை இயல்பான வழக்கமான நேரத்தில் தொடங்கியதாக கருதப்படும்.  
தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு அக்டோபர் 3 வது வாரத்தில் பருவமழை  துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது. 2014 ,2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பருவமழை முன்பே துவங்க உள்ளது.

வரலாறு சொல்வது  என்ன? 
1940 முதல் 2023 வரை  உள்ள 84 ஆண்டுகளை கணக்கீடும் போது 42 ஆண்டுகள் லாநினோ ஆண்டுகளாக இருந்திருக்கிறது. லா நினோ இருந்த 42 ஆண்டுகளில் தமிழகம் 23 ஆண்டுகள் இயல்பான மழையும் 6 வருடங்கள்  இயல்பை விட மிக அதிக மழையையும் 13 வருடங்கள் மழை பற்றாக்குறையும் தமிழகம் சந்தித்துள்ளது. 


கடந்த 24 ஆண்டுகளை கணக்கீடும் போது 2010, 2021 ஆகிய வருடங்கள் லா நினோ ஆண்டுகளாக இருந்திருக்கிறது அந்த காலக்கட்டத்தில் தமிழகம் இயல்பைவிட மிக மிக அதிகமழையை பெற்றிருக்கிறது.


பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றமே எல்நினோ லா நினோ என்கிறோம். இதுவே உலக காலநிலையை தீர்மானிக்கிறது. உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் ஏன் உலக காலநிலையை தீர்மானிக்கிறது?  


உலகின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக கடல் பரப்பினை பசுபிக் பெருங்கடல் கொண்டிருப்பதால் அதில் ஏற்படும் மாற்றம் வெப்பநிலை குறைவு அதிகரிப்பு ஆகியவை உலக காலநிலையை தீர்மானிக்கிறது. 

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எப்படி ?

தமிழகத்தை பொறுத்தவரை இந்தாண்டு அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இராணிப்பேட்டை தஞ்சை நாகை திருவாரூர்  மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி குமரி ஆகிய 20 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.

 

கொங்குமாவட்டங்களான கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பான மழை பெய்யும். கொங்கு மாவட்டங்களிலும் காற்றின் அமைப்பு சாதகமாக இல்லையெனில் மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு. வேலூர் திருப்பத்தூர் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய வட உள் மாவட்டங்களில் அக்டோபர் மாதத்திலே அதிகமழை இருக்கும் . மேலும் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் மிக அதிக மழை பெய்யும் . 


தமிழகத்தில் புயல் தாக்க வாய்ப்பு : 

தமிழகத்தில் இந்தாண்டு புயல் தாக்குவற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக டெல்டா முதல் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள் புயலால் பாதிப்புகளை சந்திக்கும்.வடகடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு சிறப்பான மழை காத்திருக்கிறது.  டெல்டா மற்றும் வடகடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் வேலூர் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். குறுகிய காலத்தில் பெருமழைக்கு வாய்ப்புள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக லாநினோ இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை பற்றாக்குறை ஏற்படும் என்று பெரும்பாலானோரால் கணிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் லாநினோ நிலவிய 2021 ம் ஆண்டு தென் மாவட்டங்கள் இயல்பை விட இரு மடங்கு அதிகமழை பதிவானது. குறிப்பாக நெல்லை மாவட்டம் சராசரியாக  வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 841 மிமீ மழை பதிவானது .கடந்த 2021 ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் 592 மிமீ மழையும் தென்காசி மாவட்டம் 720 மிமீ மழையும் இராமநாதபுரம் மாவட்டம் 592 மிமீ மழையையும் பெற்று சாதனை படைத்தது.

தென் மாவட்டங்கள் அதிக மழைக்கு வாய்ப்பு :

இந்தாண்டும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்யும். தென் மாவட்டங்களை பொறுத்தவரை தூத்துக்குடி நெல்லை தென்காசி குமரி இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்கள் அதிக மழையை பெற்றாலும் குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி ஆகிய கடலோர பகுதிகளில் குறுகிய காலக்கட்டத்தில் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தென் தமிழக மலைப்பகுதிகளிலும் அதீத மழை பெய்யும். 


நாட்டிலேயே வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் மாஞ்சோலை காக்காச்சி ஊத்து குதிரைவெட்டி நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 2500 மிமீக்கு மேல் இந்த பருவ காலத்தில் மழை பெறும். 
 நெல்லை தென்காசி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் இந்த பருவ காலத்தில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கு ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று வீசினாலே நல்ல மழை பெய்யும். 2018 ம் ஆண்டு தமிழகமே மழை பற்றாக்குறையாக இருந்த நிலையில் நெல்லை மாவட்டம் மட்டும் இயல்பை விட அதிகமழையை சந்தித்தது. இதே போல்  2019 ம் ஆண்டு தூத்துக்குடி நெல்லை இராமநாதபுரம் தென்காசி குமரி ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற எல்லா மாவட்டங்களும் மழை பற்றாக்குறையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் உள் மாவட்டங்களை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் நல்ல மழை பதிவானால் மட்டுமே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் என்ற நிலையை அடையும். ஏனெனில் நவம்பர் டிசம்பர் மாதத்தில்  மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக இருக்க வாய்ப்பு. 

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் மழை இல்லாத நாட்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரிக்கும். 


ஜனவரி மாதத்தில் மழை தொடரும் : இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை தொடரும். கடந்த 100 ஆண்டுகளில் 34 ஆண்டுகள் வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்துள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை : தமிழக கடலோர மாவட்டங்களில் குறுகிய காலத்தில் பெருமழை பெய்யும். மேலும் புயல் தாக்க இருப்பதால் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தேசிய பேரிடர் மேலாண்மைதுறை மற்றும் தமிழக பேரிடர் மேலாண்மை துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                                                                                                                      T.Raja M.Sc.,M.Ed. (Tenkasi Weatherman)  
For More updates : www.tenkasiweatherman.com
                                                                                                             
                                                                                                                            

மழை - இலவசமாய் கிடைப்பதனால்
பலபேர்  உன்னை மதிப்பதில்லை.
அலட்சியமாய் இருந்து விட்டு
ஒரு சில மாதங்களிலே உன்னை
வேண்டி காத்திருக்கிறார்கள்.
Tenkasi Weatherman இது மழையின் மொழி

Write Reviews

0 reviews