Back
temple-details

Kulasekaranpattinam

  • time : 2024-02-25

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா, தனித்துவ சிறப்பானது ஏன் தெரியுமா?

திருச்செந்தூர்: தசரா என்றதுமே தமிழர்களில் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான். மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள், குஜராத்தின் தாண்டியா நடனம், கொல்கத்தாவின் துர்க்கா பூஜை மற்றும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராக்கள்தான்.

இதில் குலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளதால் தனிச் சிறப்பு பெறுகிறது.
இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. பாண்டியர் காலத்திலேயே இக்கோயில் அமைந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.

#முத்தாரம்மன்திருப்பெயர்

தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து, அதை ஆபரணங்களாக்கி, பாண்டிய மன்னர்கள், அன்னைக்கு சூட்டி அழகு பார்த்ததால், அம்பிகை முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாகவும், உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை, தன்னை வேண்டி வழிபட்டால் உடனே குணமாக்குபவள் என்பதால் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும், இருவேறு வகைகளில் அம்பாளின் பெயர் காரணத்தை கூறுவர். பராசக்தியின் வியர்வை முத்துக்களில் இருந்து உருவான அஷ்டகாளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் என்பதால், அம்பிகை, முத்தாரம்மன் என்று பெயர் சூட்டி அழைக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுவர். எத்தனை பெயர் மூலங்கள் இருப்பினும், அத்தனைக்கும் அவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு.

#முத்தாரம்மன்கோயில்இல்லாதஊர்இல்லை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முத்தாரம்மன் கோயில் இல்லாத நகரங்களையோ, பேரூராட்சிகளையோ, அவ்வளவு ஏன், ஒரு குக்கிராமத்தையோ பார்ப்பது என்பது மிக, மிக அரிதானது. அனைத்து ஊர்களிலும் ஊர் தெய்வமாக வைத்து வணங்கப்படுகிறாள் முத்தாரம்மன். பல ஊர்களில் தெருவிற்கு ஒரு முத்தாரம்மன் கோயில்கள் இருப்பது கூட தென் மாவட்டங்களில் இயல்பானது. இப்படி, வேண்டி, விரும்பி கோயில்கள் கட்டும் அளவுக்கு, அத்தனை மக்களையும் அம்பிகையின் சக்தி காந்தம் போல ஈர்க்கிறது. முத்தாரம்மனுடன், மாரியம்மன், உச்சிமாகாளி அம்மன், சந்தனமாரியம்மன் போன்ற அம்மன்களையும் சிலைகளாக நிறுவி ஒரு சேர வழிபடுவதுதான் தென் மாவட்டங்களில் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது. இருப்பினும் அங்கெல்லாம், முதல் பூஜை மூத்தவள் முத்தாரம்மனுக்குதான்.

#ஊர்திருவிழாக்கள்

இப்படி பல்வேறு ஊர்களிலும் உள்ள முத்தாரம்மன் கோயில்களில் வருடந்தோறும், ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்தந்த கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்கள், வரி வசூல் செய்து கோயில் கொடை விழாவை நடத்துவார்கள். அப்போது முளைப்பாரி எடுத்தல், அம்மன் மஞ்சள் நீராடுதல் போன்ற பல நிகழ்ச்சிகளும், சிறப்பு பூஜைகளும், வில்லிசை, கணியான் கூத்து, கரகாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளும், கோயில்களில் நடைபெறும். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலிலும் கொடை விழா நடக்கும். ஆனால், புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த தசரா பண்டிகையின்போது, எல்லா ஊர்க்காரர்களின் ஈர்ப்பு புள்ளியாக மாறுவது குலசேகரன்பட்டினம்தான்.

#அனைத்துஊர்களிலும்களைகட்டும்தசராவிழா

தசரா விழா நடைபெறும் 10 நாட்களும், அவரவர் ஊர்களில் உள்ள முத்தாரம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட படையல்கள் இட்டு சிறப்பு பூஜை செய்யும் மக்கள், 10வது நாள் விஜயதசமியன்று, அலைகடலென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்குதான் செல்வர். அன்றைய தினம் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் குறைந்தது 500000 பக்தர்கள் குவிந்து, அம்மனை வழிபடுவார்கள் என்பது சிறப்பு. பக்தர்கள் எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்கிறதே தவிர, குறையவில்லை என்கிறது மாவட்ட நிர்வாகத்தின் புள்ளி விவரம்.

#பிறஊர்களில்இருந்துவரும்பக்தர்கள்

தென் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இளைஞர்கள் சென்னை, கோவை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் தொழில் செய்கிறார்கள், அல்லது பணிநிமித்தமாக வசிக்கிறார்கள். தங்களை வாழ்க்கையில் வளர்த்துவிடும் அன்னையாக முத்தாரம்மனை போற்றும் அவர்கள், தசரா விழாவின்போது, அம்பிகையை தரிசனம் செய்ய, குலசேகரன்பட்டினத்தில் குவிகிறார்கள். குலசேகரன்பட்டினம் தசராவின் சிறப்பு, அங்கு, ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்கப்படுவதில்லை. அத்தனை லட்சம் மக்களும், அண்ணன், தம்பிகளாய், அக்கா, தங்கைகளாய் தோளோடு தோள் உரச நின்று அம்பிகையை தரிசிப்பார்கள்.

#அம்மனுக்காகபல்வேறுவேடங்கள்

குலசேகரன்பட்டினம் தசரா உலக அளவுக்கு எட்டுவதற்கு காரணம், பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர்களில் காணிக்கை பெற்று, அதை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று, முத்தாரம்மன் கோயிலில் வந்து சமர்ப்பிப்பதுதான். காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலை மாடன், ராஜா, போலீஸ், பெண் என பல நூறு வேஷங்களை தத்ரூபமாக தரித்தபடி, பக்தர்கள் காணிக்க சேகரிப்பார்கள். "வேடம் அணிந்து காணிக்கை எடுத்து வந்து உனது காலடியில் சமர்ப்பிக்கிறேன்" என்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டால், தீராத வினைகளும் தீருவதாக ஐதீகம். இதனால்தான் அத்தனை லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் காணிக்கை செலுத்த வேடமணிந்தபடி கோயிலுக்கு வருவதால் விஜயதசமி நாளன்று, குலசேகரன்பட்டினமே பக்தி வெள்ளத்தால் மிதக்கிறது.

#ஆணவத்தைஅழிக்கும்வழிபாடு

இப்படி வேடமிட்டு காணிக்கை சேகரிப்பதில் ஒரு அர்த்தம் உள்ளது. உயர்ஜாதி என்று எண்ணிக்கொள்வோராக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும், வேடம் அணிந்த பிறகு, ஏழை வீட்டிலும், பிற ஜாதியினர் வீட்டிலும், பிற மதத்தவர்கள் வீட்டிலும் போய் நின்று "முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க.." என்று சொல்லி காணிக்கை கேட்டாக வேண்டும். ஆன்மீகத்தின் அடுத்த நிலைக்கு செல்லவிடாமல் மனித மனத்தில் தடைக்கல்லாக நிற்கும் ஆணவம் இதன் மூலம் அழிக்கப்படுகிறது. ஆணவத்தை ஒழித்துக்கட்டுவதே காணிக்கை சேகரிப்பதின் தாத்பர்யம். ஆவணம் அழியப்பெற்று, அந்த காணிக்கையை எடுத்து தனது காலடியில் சமர்ப்பிக்கும் பக்தனை அம்பிகை தாயின் கருணையோடு வாரியணைத்து வேண்டிய வரங்களை அள்ளிக்கொடுக்கிறாள். இதுதான் குலசேகரன்பட்டினம் தசராவின் ஆகப்பெரிய சிறப்புகளில் முக்கியமானது என்று கூறுகிறார்கள் ஆன்மீக பண்டிதர்கள்.

#ஒற்றுமையைஉருவாக்கும்தசராசெட்
'
குலசேகரன்பட்டினம் தசரா என்பது இளைஞர்களிடையே, ஒற்றுமையையும், குழு மனப்பான்மையையும் ஊக்குவிக்கிறது என்பது மற்றொரு சிறப்பாகும். வேடமிடும் பக்தர்கள் ஒவ்வொருவராக மட்டுமின்றி, ஒரு குழுவாகவும் இணைந்து செயல்படுவார்கள். இதற்கு 'தசரா செட்' என்று பெயர். ஒவ்வொரு ஊரிலும் சில, பல தசரா செட்டுகள் இக்காலகட்டத்தில் அமைக்கப்படுகின்றன. காளி வேடமிடுவோர் 40 நாட்கள் தொடர்ந்து மிக கடுமையான விரதங்கள் இருக்க வேண்டிவரும். பிரம்மச்சரியம், ஒரே நேர பச்சரிசி சாப்பாடு என அவர்களின் விரத அனுஷ்டானங்கள் மிக அதிகம். மனதையும், உடலையும் அடக்கியாளும் சக்தியை இந்த விரதமுறை பக்தர்களுக்கு வழங்குகிறது. எனவே ஒவ்வொரு செட்டிலும், காளி வேடம் அணிவோர்தான் தலைமையாக கருதப்படுவார்கள். இது அம்பிகைக்கான திருவிழா என்பதால் காளிக்கே அங்கு அதிக முக்கியத்துவம். நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வர்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வர்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான பிரத்யே ஆடைகள், வாயில் கோரப்பல் என காளி வேடத்தை தினமும் பூணுவதற்கே பொறுமை மிகவும் அவசியம்.

#மகிஷாசூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் விஜயதசமி நாளன்று, மகிஷாசூர சம்ஹாரம் மிகவும் பிரபலமானது. வேடமணிந்த பக்தர்கள் கோயிலை நெருங்கும்போது அம்மன் அருள் வந்து ஆடுவதை காண கண்கோடி வேண்டும். அதிலும் காளி வேடமணிந்த பக்தர்களின் ஆவேச ஆட்டத்தை கட்டுப்படுத்த தசரா செட்களில் உள்ள பிறர் பெரிதும் முயற்சி எடுத்துக்கொள்வார்கள். விஜயதசமி நாளின் நள்ளிரவில், வங்கக்கடலோரம், நடைபெறும் மகிஷாசூரசம்ஹார விழாவில், அம்பிகை மகிஷனை வதம் செய்ததும் தசரா விழா இனிதே நிறைவு பெறும். காப்புகட்டி வேடமணிந்த பக்தர்கள், அம்பிகையை தரிசனம் செய்த நிறைவோடு, அதன்பிறகு காப்பை கழற்றி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

#அம்மன்அருள்பெருக

இப்படி ஒரு ஒற்றுமையான பக்தி நிகழ்வை வேறெங்கும் காண்பது அரிது என்பதாலேயே குலசேகரன்பட்டினம் தசரா விழா படிப்படியாக உலகமெங்கும் புகழ்பெறத்தொடங்கியுள்ளது. திருச்செந்தூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில்தான் உள்ள குலசேகரன்பட்டினத்திலுள்ள ஞானமூர்த்தீஸ்வர் சமேத முத்தாரம்மனை, அம்மையும், அப்பனுமாக நினைந்துருகி வழிபடுகிறார்கள் பக்தர்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கும் அன்னை, திருமண வரம், குழந்தைவரம், செல்வவளம் அளிப்பவள் என்பதோடு, மன குழப்பங்களை நீக்கி நல்வாழ்வு வழங்கும் மனோன்மணியாகவும் அருள்பாலிக்கிறாள். நீங்களும் தரிசனம் செய்து அம்மனின் அருளை பெறலாம்...

Write Reviews

1 reviews

  • ???? Ticket; Operation #RM28. GET > out.carrotquest-mail.io/r?hash=YXBwPTY0MDcyJmNvbnZlcnNhdGlvbj0xN
    28 days ago

    uzcjoa