மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது தரங்கம்பாடி எனும் மீனவ கிராமம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானுறு போன்ற இலக்கியங்கள் இவ்வூரை பொறையாறு என்று குறிப்பிடுகின்றன.
அக்காலத்தில் இவ்வூர் சிறந்த துறைமுகமாக இருந்துள்ளது.கி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக (டேனிஷ் கோட்டை) அமைத்தனர். இதுதான், இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அமைந்தது.
400 வருடங்கள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த டேனிஷ் கோட்டை.. இந்த கோட்டையில் செயல்படும் அருங்காட்சியகத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள் டேனிஷ்கால பத்திரங்கள், போர்க்கருவிகள், 16ம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்
மேலும் இந்த கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை, அப்படியே பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் தரங்கம்பாடி கடற்கரையை நம் அனைவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டும்.