ஏழைகளின் கோவா - மணப்பாடு ,தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்திருக்கும் அழகிய கடற்கரை கிராமம் மணப்பாடு . திருச்செந்தூர் -கன்னியாகுமரி சாலையில் உடன்குடி அருகே அமைந்துள்ளது மணப்பாடு. மணப்பாடு அருகே குலசை முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் தசராதிருவிழா உலகப்புகழ்பெற்றது .
மணப்பாடு ஏழைகளின் கோவா என்று அழைக்கப்படுகிறது. இயற்கையிலேயே அழகு நிறைந்த மணப்பாடு கடல் ஒருபுறம் அமைதியாகவும், மற்றொரு புறம் ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் காணப்படும். மணப்பாடு கடற்கரையில் கடல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்த சிறப்பான இடமாக தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் ஐந்து கடல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அலைசறுக்கு போட்டி நடத்த தமிழ்நாட்டிலே மிக சிறந்த கடற்கரையாக மணப்பாடு இருப்பதாக தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக சிறந்த 5 கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
மூன்று புறமும் கடலால் சூழப்பட்டிருக்கும் . ஒருபுறமும் மிகப்பெரிய மணல் குன்று இருக்கும். இந்த மணல் மேட்டில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலங்கரை விளக்கு, கண்காணிப்பு காமிரா உள்ளது.
மணப்பாட்டின் தேவாலயம் அமைந்துள்ள மணல் குன்றில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். இந்த அழகை பார்த்துதான் மணப்பாட்டில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 'இயற்கை' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பாடல், நீர் பறவை, மணிரத்தினத்தின் கடல், ஜீவா, நீதானே என் பொன்வசந்தம், போன்ற மைல் கல் பதித்த பல திரைப்படங்கள் மணப்பாட்டில் படமாக்கப்பட்டவை ஆகும்.
உலகிலேயே மணப்பாட்டில் மட்டும்தான் ஒரே நேரத்தில் பாய் படகு ஓட்டம், அலைச்சறுக்கு ஓட்டம், காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம், குறும்படகு ஓட்டம், நின்றபடி துழாவல் ஓட்டம் ஆகிய 5 விதமான கடல் சாகச போட்டிகளை நடத்த முடியும் என கூறப்படுகிறது. இங்கு மணப்பாடு கடல் பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள், கடல்சார் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
கோவா கடற்கரை போல ஜில் என்ற குளிர் காற்று குளியலுக்கு ஏற்ற கடற்கரை என்பதால் மணப்பாட்டிற்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து ஆனந்த குளியல் போடுகின்றனர். வாகன பார்க்கிங், கழிப்பிட நுழைவுக் கட்டணம் ஏதுமில்லாததால் பயணிகள் எந்தவித கட்டுப்பாடுமின்றி மணப்பாடு கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.
திருச்செந்தூர் வருகை தரும் மக்கள் கட்டாயம் மணப்பாடு கடற்கரையை பார்த்து செல்லுங்கள்