Back
temple-details

குமரி கடலில் காற்று சுழற்சி .தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை

  • time : 2024-05-09

தமிழ்நாட்டில் ஒரு மழைகாலம்.  தீவிரமடையும் கோடைமழை 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கோடைமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக கோடைகாலங்களில் தமிழ்நாட்டில் குமரி தென்காசி கோவை நீலகிரி திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தான் அதிகமழை பெறும். 


இந்த நிலையில் புதிய காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களிலும் நல்ல மழை பெறும். குறிப்பாக வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 


மதுரை விருதுநகர் திருச்சி வேலூர் சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் தென்காசி தேனி ஆகிய மலைமாவட்டங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். 
பொதுவாக கடலோர பகுதிகளில் நள்ளிரவு அதிகாலை நேரங்களிலும் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மாலை இரவு நேரங்களிலும் மழை எதிர்பார்க்கலாம். 


வரலாறு சொல்வது என்ன?  மே மாத வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்கிறதா தமிழகம்?

2014 ம் ஆண்டு குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகாரணமாக மே 7,8 ம்தேதி தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவானது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அதீத கனமழை பதிவானது. தூத்துக்குடி இராமநாதபுரம் குமரி தென்காசி மாவட்டங்களிலும் மிக கனமழை பதிவானது.  நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் ஒரே நாளில்  300 மிமீ மழையும் மணிமுத்தாறு 266 மிமீ மழையும் அம்பாசமுத்திரம் 225 மிமீ மழையும் பதிவானது. நாங்குநேரி 174 மிமீ, சேரன்மகாதேவி 152 மிமீ, காயல்பட்டினம் 150 மிமீ ,கொட்டாரம் 143 மிமீ,குளச்சல் 109 மிமீ, கமுதி 106 மிமீ,நாகர்கோவில் தென்காசி 94 மிமீ மழையும் பதிவானது. மே மாத வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை தமிழகம் பெறுகிறது. 

இதே போல தற்போது குமரி கடலில் காற்று சுழற்சி உருவாகுவதால் ஒட்டு மொத்த தென் மாவட்டங்களுமே நல்ல மழை பெறும். கொங்குமாவட்டங்கள் தமிழக உள்மாவட்டங்கள் என தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் மழை எதிர்பார்க்கலாம். இந்தாண்டு தமிழகத்தில் கோடைமழை கடும் பற்றாக்குறையாக இருந்த நிலையில் வரும் நாட்களில் இயல்பை விட அதிகமழை என்ற நிலையை தமிழகம் எட்டும்.


வெப்ப அலை தொடருமா?  தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பஅலை வீசிய நிலையில் இனி தமிழ்நாட்டில் வெப்ப அலை என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 10 நாட்களுக்கு இயல்பை விட மிக குறைவான வெப்பநிலை பதிவாகும். மழை தீவிரமடைவது எப்போது? தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். மே 12 ம்தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். 

-Tenkasi Weatherman 

Write Reviews

0 reviews