பொங்கல் வாழ்த்தும் தமிழக வானிலை அறிவிப்பும் :
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் "தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே" என்று நற்றிணை 80 மற்றும் 124ஆம் பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற குறுந்தொகையின் 196வது பாடலிலும், "தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று புறநானூறின் 70வது பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறின் 84 வைத்து பாடலிலும், “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகை பாடலிலும் சங்க காலம் தொட்டே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக சங்க கால தமிழ் இலக்கிய வரலாற்று குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
அறுவடைத் திருநாள், உழவர்கள் இயற்கைக்கு படையலிடும் விழா என்றும், சூரியனை வழிபடும் விழா என்றும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் பண்டிகை மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்.கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்
தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை -தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை (14-01-2025)(Tenkasi Weatherman Forecast )
பொங்கள் நன்னாளில் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. குமரி கடல் அருகே நீடிக்கும் காற்று காரணமாக ஈரப்பதம் மிக்க காற்று தென் தமிழகம் ஊடாக வீசுவதால் நாளை (ஜன 14) நெல்லை தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நாளை மழை பெய்யும். குறிப்பாக திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு கனமழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு.
15-01-2025 (Tenkasi Weatherman Forecast )மாட்டு பொங்கலன்றும் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு . பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ள பகுதிகளில் மாலை இரவு நேர நிகழ்ச்சிகளை மழைக்கேற்றவாறு நடத்தி கொள்ளவும். முக்கியமாக கோலப்போட்டி நடத்த வேண்டாம்.
தென் மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.
பொங்கலன்று இதற்கு முன்பு தென் தமிழகம் மழை பெற்றுள்ளதா?
1991 முதல் 2025 வரையிலான 35 வருட காலத்தில் பொங்கல் திருநாளன்று தென் மாவட்டங்கள் மழை பெறுவது அரிதாக இருந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் 2006,2010,2021 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டுமே நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்கள் பொங்கலன்று மழையை பெற்றிருக்கிறது. 2021 ம் ஆண்டுக்கு பிறகு தற்போதும் பொங்கலன்று நாம் மழையை பெற உள்ளோம்.
தென் தமிழக மக்களே மழையோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடவும்.
-Tenkasi Weatherman.