Back
temple-details

தென் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை

  • time : 2025-03-10

தென் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான  காற்று சுழற்சி தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகர்வதால் இன்று நள்ளிரவு நாளை அதிகாலை  முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை குறித்து திருவள்ளுவர் :

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்கம் : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

நாளை முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை படிப்படியாக குறைந்து மழை அதிகரிக்கும். குறிப்பாக நாளை   தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர்  தஞ்சை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை  ஆகிய 10 மாவட்டங்களில்  இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை

தென் தமிழக கடல் பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29°© ஆக உள்ளது. எனவே மன்னார் வளைகுடாவில் தொடர்ந்து மழை மேகங்கள் உருவாகும். இன்று நள்ளிரவு நாளை அதிகாலை முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக நாளை இரவு நேரத்தில் பெய்யும் மழையானது உச்சகட்ட தீவிரமடையும். தொடர்ந்து 12 மணி நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு  இடங்களில் கனமழை பெய்யும். நாங்குநேரி ராதாபுரம் சாத்தான்குளம் திசையன்விளை ஏரல் ஸ்ரீவைகுண்டம் நெல்லை சேரன்மகாதேவி கயத்தாறு கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டயபுரம் சிவகிரி சங்கரன்கோவில் ஆலங்குளம் விகேபுரம் தென்காசி திருவேங்கடம் கடையநல்லூர் இராமநாதபுரம் இராமேஷ்வரம் உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் கனமழை மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் தூத்துக்குடி திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் செங்கோட்டை ஆகிய 4 தாலுகாவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.

குற்றால அருவிகள் களைகட்டும். பாபநாசம் மணிமுத்தாறு உட்பட தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
 

மார்ச் மாத மழை குறித்த சுவாரஸ்ய வரலாறு:

கடந்த 132 ஆண்டுகால வானிலை வரலாற்றில் மார்ச் மாதத்தில் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி உள்ளது. 1938 ஆம் ஆண்டு உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ம் ஆண்டு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது ஆனால் தமிழகத்திற்கு வரவில்லை. அதன் பின்னர்  2022 ம் ஆண்டு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.2022 ம் ஆண்டு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரை  கடந்த 132 ஆண்டுகளில்  வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கிய முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுவே ஆகும்.

குமரி மாலத்தீவு காற்றழுத்தம்
இதற்கிடையே 2018 ல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது இந்த காற்றழுத்தம் காரணமாக 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி வரலாறு காணாத மழையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மார்ச் மாத மழை பொழிவு

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் மாநிலத்திலேயே அதிகமழை பெய்யும் மாவட்டம் தென்காசி. காற்று முறிவு காரணமாக இம்மாவட்டம் அதிகமழையை பெறும். இதுவரை கடந்த 87 ஆண்டு கால வானிலை வரலாற்றில் தமிழகத்தில் 2008 ம் ஆண்டு பதிவான மழை மிக மிக  அதிகம்.2008 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் சராசரியாக 167 மிமீ மழையை பெற்றிருக்கிறது.

தென் மாவட்ட மக்களே கோடையிலும் ஒரு மழை காலத்தை ஏற்று கொள்வோம்.
குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன் மழையே உனக்காக காத்திருக்கிறேன்.

-Tenkasi Weatherman.

Write Reviews

2 reviews

  • K.selvamurugan
    25 days ago

    Super

    Admin Reply

  • Karthick velan
    25 days ago

    நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகிறேன் நான் ஒரு பத்திரிக்கையாளன் ராஜா சார் உங்கள் கணிப்பு அப்படியே வருண பகவானின் ஆவதாரம் போல் உங்களுடைய கணிப்பு துல்லியமாக இருக்கிறது. உங்களுடைய வானிலை அறிவிப்பை நான் எங்கள் தாலுகாவை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் எனது வாட்ஸ் அப் மூலம் ஷேர் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவேன். அவர்களும் அதற்குத் தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள். பயனடைவார்கள் இவை அனைத்தும் உங்களையே சாரும் ராஜா சார் உங்களுடைய கடின உழைப்பும் விவசாயி மற்றும் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட உங்கள் மனதும் பணியும் மென்மேலும் வளர அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்

    Admin Reply