தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்ற நிலையில் தென்மேற்கு பருவகாற்றானது தற்போது குஜராத் ராஜஸ்தான் பஞ்சாப் ஹரியானா ஜம்மு காஷ்மீர் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் பின் வாங்கியுள்ளது.
அதன் பின்னர் மத்திய இந்தியா மற்றும் தென் மாநிலங்களில் அக்டோபர் 20 ம்தேதிக்குள் முற்றிலுமாக தென்மேற்கு பருவகாற்று விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை கோவை மாவட்டம் சின்னகல்லாறு பகுதிகளில் 4355 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி நெல்லை இராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பற்றாக்குறையும் நிலவியது.
இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பல பகுதிகளில் கடந்த 122 நாட்களாக மழை பதிவாகாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவகாற்றும் வலுகுறைந்துள்ளதால் இரு திசை காற்று சந்திப்பு தமிழகத்தில் ஏற்பட உள்ளது. அதாவது காற்று முறிவு காரணமாகவும் இரு திசை காற்று சந்திப்பு காரணமாகவும் நாளை முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.
அக்டோபர் 3,4,5 ஆகிய மூன்று நாட்களை பொறுத்தவரை மதுரை திண்டுக்கல் இராமநாதபுரம் தேனி சிவகங்கை புதுக்கோடை விருதுநகர் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 11 தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் மழை பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்த நாள் மழை பெய்யாத பகுதிகளிலும் மழை பெய்யும்.
குறிப்பாக அக்டோபர் 6 ம்தேதிக்குள் அனைத்து தென் மாவட்டங்களிலும் கனமழை உறுதி. குறிப்பாக நீண்ட நாட்கள் மழை பெய்யாத நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் சிவகாசி அருப்புக்கோட்டை கோவில்பட்டி எட்டயபுரம் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் சங்கரன்கோவில் சிவகிரி புளியங்குடி வாசுதேவநல்லூர் கயத்தாறு உசிலம்பட்டி எழுமலை பேரையூர் வாடிப்பட்டி மதுரை மாநகர் திருமங்கலம் சிவகங்கை இடையன்குடி கமுதி பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை எதிர்பார்க்கலாம்.
எனவே தென் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம். அக்டோபர் 6 ம்தேதிக்குள்ளாக ஒட்டுமொத்த தென் பகுதியும் நல்ல மழை பெறும். இந்த மழையானது பொதுவாக மாலை இரவு நேரத்தில் மட்டுமே பெய்யும்.
மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும் இடி மின்னலும் வலுவாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மழையின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்குமாறு நமது வானிலை பக்கத்தின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
-Tenkasi Weatherman.