(Posted on 24-05-2025 ) தென்மேற்கு பருவமழை இன்று துவங்குகிறது. தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கொங்கன் கடலோர பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை ஆச்சர்ய தகவல்கள் :
1901 முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடந்த 124 ஆண்டுகால இந்திய வரலாற்றில் 1918 ம் ஆண்டு மே 11 ம்தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அதே போல வரலாற்றில் மிக தாமதமாக 1972 ம் ஆண்டு ஜூன் 18 ம்தேதியே பருவமழை துவங்கியுள்ளது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் வரலாற்றில் முன்கூட்டியே துவங்கிய 1918 ம் ஆண்டும் மிக தாமதமாக துவங்கிய 1972 ஆம் ஆண்டும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக இருந்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
இன்று கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆழப்புழா எர்ணாகுளம் திரிசூர் பாலக்காடு கண்ணூர் வயநாடு ஆகிய இடங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பத்தனம்திட்டா இடுக்கி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பதிவாகும்.
தமிழ்நாட்டினை பொறுத்தவரை கேரளாவை எல்லையாக கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். குறிப்பாக கோதையாறு மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து புளியரை குற்றாலம் செங்கோட்டை மேக்கரை ஆகிய இடங்களில் மழை கொட்டி தீர்க்கும்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. அவலாஞ்சி தேவாலா பந்தலூர் நடுவட்டம் ஆகிய இடங்களில் 200 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்பு.
-Tenkasi Weatherman.