weather-over-tamilnadu

பாபநாசம் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

  • time: 2024-12-15

(Posted on 15-12-2024 )பாபநாசம் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் பாபநாசம் மணிமுத்தாறு அணைகள் 100 அடியை எட்டுகிறது. தற்போது நண்பகல் 12 மணி நிலவரப்படி பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய இரு அணைகளும் 97 அடியை எட்டியுள்ளது.  தற்போது பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 2833 கன அடியும் மணிமுத்தாறு அணைக்கு 3285 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது எனவே இன்று இரவுக்குள் 100 அடியை தாண்டும்.

 டிசம்பர் 12 ம்தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 69 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் ,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28 அடியும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 67 அடியும்  உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 17 அடி உயர்ந்துள்ளது. 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை

  • time: 2024-12-10

தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை 

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ள நிலையில் நாளை தமிழக கடலோரத்தை நெருங்கும் மேலும்  இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகத்தின் ஊடாக அரபிக்கடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் எந்த தேதிகளில் மழை பெறும் என்பதை விரிவாக காணலாம். 


 11-12-2024 (புதன்கிழமை)  நாளைய தினம் டெல்டா மாவட்டங்களில் மழை துவங்கும். குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. பிற வட கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும. 

12-12-2024 (வியாழன்கிழமை)  - சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம்  தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை  ஆகிய கடலோர மாவட்டங்களில் மிக  கனமழை பெய்யும் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான இராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி    சிவகங்கை  ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். 

மேலும் வேலூர் திருப்பத்தூர் நாமக்கல் சேலம் தர்மபுரி மதுரை இராமநாதபுரம் கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். விருதுநகர் குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென்கோடி மாவட்டங்களை பொறுத்தவரை விளாத்திகுளம் எட்டயபுரம் கோவில்பட்டி கழுகுமலை கயத்தாறு சிவகிரி திருவேங்கடம் சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். பிற தென்கோடி பகுதிகளில் டிசம்பர் 12 மழைக்கு வாய்ப்பு இல்லை.

13-12-2024 -வெள்ளிகிழமை - தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் கொங்கு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

14-12-2024 -சனிகிழமை - தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

தென் மாவட்டங்களுக்கான சிறப்பு அறிவிப்பு : 

இந்த சுற்றில் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும் மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கணிசமான மழை பதிவாகும்.  தென் கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் செல்லும் போது தென் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 12 ம்தேதி மதுரை சிவகங்கை திண்டுக்கல் இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் டிசம்பர் 13,14 தூத்துக்குடி நெல்லை தென்காசி உள்ளிட்ட அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும். 


-Tenkasi Weatherman

weather-over-tamilnadu

டெல்டா தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-25

தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு 


தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை பூமத்திய ரேகை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய புயல் சின்னம் காரணமாக இன்று டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு  தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை துவங்கும்.இன்று இரவு மிக கனமழை பதிவாக வாய்ப்பு 

நாளைய தினம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. கடுமையான மழை பற்றாக்குறையை சந்தித்த டெல்டா மாவட்டங்களுக்கு இம்மழை ஒரு வரபிரசாதமாக அமையும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

தென்மேற்கு வங்ககடல் இலங்கை தென்கிழக்கு அரபிக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

பள்ளி கல்லூரி மாணவர்களே இன்று இரவு டெல்டா தென் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்பதால் நாளை பல மாவட்டங்களுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது.குறிப்பாக டெல்டா மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு   நாளை விடுமுறை அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. 

-Tenkasi Weatherman