weather-over-tamilnadu

மிக தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

  • time: 2025-05-26

(Posted on 26-05-2025 ) மிக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை 

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


மத்திய மேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் ஈரப்பதத்தை கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கும் என்பதால் இன்று முதல் மழையின் அளவு படிப்படியாக தீவிரம் அடையும். 

கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி  கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும்.  குறிப்பாக கோவை நீலகிரி மாவட்டங்களில் பெருமழை பெய்யும். மேலும் திருப்பூர் தேனி மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. குமுளி தேக்கடி பெரியார் பகுதிகளில் மிக கனமழை பதிவாகும். 

பருவமழை தீவிரமடைய இருப்பதால் தென்காசி மூணாறு பொன்முடி ஊட்டி ஆகிய மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-24

(Posted on 24-05-2025 ) தென்மேற்கு பருவமழை இன்று துவங்குகிறது. தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு 

கொங்கன் கடலோர பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவமழை ஆச்சர்ய தகவல்கள் : 

1901  முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடந்த 124 ஆண்டுகால இந்திய வரலாற்றில்  1918 ம் ஆண்டு மே 11 ம்தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அதே போல வரலாற்றில் மிக தாமதமாக  1972 ம் ஆண்டு ஜூன் 18 ம்தேதியே பருவமழை துவங்கியுள்ளது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் வரலாற்றில் முன்கூட்டியே துவங்கிய 1918 ம் ஆண்டும் மிக தாமதமாக துவங்கிய 1972 ஆம் ஆண்டும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக இருந்துள்ளது. 

மிக கனமழை எச்சரிக்கை 

இன்று கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆழப்புழா எர்ணாகுளம் திரிசூர் பாலக்காடு கண்ணூர் வயநாடு ஆகிய இடங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பத்தனம்திட்டா இடுக்கி மாவட்டங்களிலும்  இன்று மிக கனமழை பதிவாகும். 

தமிழ்நாட்டினை பொறுத்தவரை கேரளாவை எல்லையாக கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். குறிப்பாக கோதையாறு மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து புளியரை குற்றாலம் செங்கோட்டை மேக்கரை ஆகிய இடங்களில் மழை கொட்டி தீர்க்கும். 

மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. அவலாஞ்சி தேவாலா பந்தலூர் நடுவட்டம் ஆகிய இடங்களில் 200 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்பு.

-Tenkasi Weatherman.

 

weather-over-tamilnadu

துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

  • time: 2025-05-21

துவங்குகிறது தென்மேற்கு பருவமழை 

தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் மே 23 ம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து  மே 24 ம்தேதி கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்தவரை இன்று முதல் அடுத் 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக பகுதிகளான கன்னியாகுமரி  தென்காசி கோவை நீலகிரியிலும் சாரல் மழை பதிவாகும். 

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் மே 24  ம்தேதி முதல் கேரளா கர்நாடகா மகராஷ்டிரா கோவா ஆகிய மேற்கு கடலோர மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் . தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும்  மே 24 ம்தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக நீலகிரி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

கன்னியாகுமரி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-03

(Posted on 03-05-2025 ) கன்னியாகுமரியில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு 

தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி திருவனந்தபுரம் கொல்லம் தென்காசி பத்தனம்திட்டா கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும். பலத்த சூறைக்காற்றுடன் பலத்த இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு 

ஆழப்புழா எர்ணாகுளம் இடுக்கி திரிசூர் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கொங்கு மாவட்டங்களை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு. 

வெப்பநிலையை பொறுத்தவரை தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடைகாலம் முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக குமரி தென்காசி கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் கோடைகாலம் நிறைவு பெற்றுள்ளது. 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.

  • time: 2025-04-16

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும்

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும். மற்றபடி மாநிலத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. இதே நிலை அடுத்த 2 வாரங்களுக்கு தொடரும்.
 

அதிக வெப்பநிலையால் வெப்ப அழுத்தத்தைத் தூண்டும், இது வெப்ப பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். தோல் பிரச்சனை மற்றும் வெப்பம் தொடர்பான பிரச்சனைகள் எழும் என்பதால் அரசும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.மேலும் பேருந்து நிலையங்கள் கோவில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கான வேண்டுகோள்:

பொதுமக்களை பொறுத்தவரை நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். உடலில் நீரிழப்புகளை தடுக்க மோர் பதனீர் இளநீர் பழஜூஸ் லஸ்ஸி போன்ற இயற்கை குளிர்பானங்களை அதிகளவு அருந்தவும். வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். மேலும் வீட்டில் பகல் நேரத்தில்   வீட்டின் ஜன்னல்களை திரைச்சீலைகளை மூடி வைப்பதன் மூலம் வீட்டிற்குள் நேரடி சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துங்கள். குளிர்ந்த காற்று உள்ளே வர இரவில் அவற்றைத் திறக்கவும்.

வெயில் காலங்களில் உங்களுடைய உடற்பயிற்சி நேரத்தை அதற்குத் தகுந்தபடி மாற்றுங்கள். காலையில் உங்களுடைய வழக்கமான உடற்பயிற்சி நேரத்து முன்னதாகவே குளிர்ச்சியாக இருக்கும்போதே உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் ஒத்திவைக்க முயற்சி செய்யுங்கள்.

இல்லாவிடில் உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெப்ப அலைகள்ல் அவதிப்பட நேரிடும்.

பொதுமக்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால் ஊட்டி கொடைக்கானல் பகுதிக்கு மட்டும்  செல்லவும் மற்றபடி வேறு எங்குமே தமிழகம் கேரளாவில் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும் ஏனெனில் அனைத்து இடங்களிலுமே வெயில் சுட்டெரிக்கும்.

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • time: 2025-04-09

(Posted on 09-04-2025 காலை 9 மணி ) தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

வலுகுறைந்த ஈரப்பதமான காற்று தென் தமிழத்தின் ஊடாக வீசுவதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி  மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே  மிதமான மழை பெய்யும். 

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். 

-Tenkasi Weatherman