weather-over-tamilnadu

குளிரில் நடுங்கிய தென்காசி

  • time: 2025-06-14

குளிரில் நடுங்கும் தென்காசி

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது.

பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 28°© ஒட்டியே பதிவானதால் இன்று கடுமையான குளிர் நிலவியது.

குற்றால சீசன் நிலவரம் : தென்காசியை பொறுத்தவரை குளுகுளு சீசன் தொடர்கிறது. இதமான தென்றல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை தவழும் மேககூட்டங்கள் குளுகுளு மழை என ரம்மியமாக காட்சியளிக்கிறது தென்காசி.

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

மீண்டும் தீவிரமடைகிறதா தென்மேற்கு பருவமழை?

  • time: 2025-05-31

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவது எப்போது?

கேரளா மற்றும் தமிழகத்தில் மே 24 ம்தேதி  தென்மேற்கு பருவமழை துவங்கியது. கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்த மழையானது தற்போது படிப்படியாக குறைய துவங்கியது . பொதுவாக தமிழ்நாட்டினை பொறுத்தவரை மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் பதிவாகும் மழையை கோடைகாலமழையாக கருதப்படும். ஜூன் 1 ம்தேதி முதல் பதிவாகும் மழைதான்  தென்மேற்கு பருவமழை கால அளவுகளில் சேர்க்கப்படும்.

இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை துவங்கினாலும் இன்றுதான் தமிழகத்திற்கு கோடைகாலம் நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 1 முதல் இன்று மே 31 வரையிலான கோடைகாலத்தில் தமிழகம் சராசரியாக 246 மிமீ மழையை பெற்றுள்ளது இது இயல்பை  விட 97%  அதிகமழையாகும். இந்த கோடைகாலத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதிகமழையை பெற்றிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் சராசரியாக 601 மிமீ மழையும் கன்னியாகுமரி 517 மிமீ மழையும் கோயம்புத்தூர் மாவட்டம் 511 மிமீ மழையும் திருநெல்வேலி 468 மிமீ மழையும் தென்காசி 375 மிமீ மழையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த கோடைகாலத்தில் தமிழகத்தில் மலை மாவட்டங்களிலுள்ள அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் பல அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க மே மாதம் : தமிழகத்தில் இந்தாண்டு மே 2 வது வாரத்திலேயே கோடை வெயில் முடிவுக்கு வந்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடைகாலத்திலேயே பருவமழை துவங்கிய காரணத்தால் தமிழகம் முழுவதும் இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி விட்டது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மே மாத பகல் நேர வெப்பநிலை 29°© ஆக பதிவானது. மேலும் தென்காசி குமரி கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் ஊட்டிக்கு நிகராக வெப்பநிலை குறைவாக பதிவானது. எனவே மே மாதத்தில் தமிழக தென்மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்கள் குளிரில் நடுங்கியது.

ஜூன் மாதம் எப்படி?

ஜூன் முதல் வாரத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை வலுகுறைந்தே காணப்படும். தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான குமரி நெல்லை தென்காசி தேனி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் சமவெளி பகுதியில் அடுத்த 1 வாரத்திற்கு பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மலையோர பகுதிகளில் மட்டும் அவ்வப்போது சாரல் மழை பெய்யும்

சமவெளி பகுதியில் மழை இல்லையென்றாலும் நீர்பிடிப்பு பகுதியில் ஜூன் 4 ம்தேதி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்யும் என்பதால் அணைகளுக்கும் அருவிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து இருக்கும்.

தென்மேற்கு பருவமழை மீண்டும் ஜூன் 2 வது வார இறுதியில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஜூன் 14 ம்தேதியை ஒட்டிய நாட்களில் மழை தீவிரமடைய சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

- Tenkasi Weatherman

weather-over-tamilnadu

கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-29

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை 

வடமேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடல் ஈரப்பதத்தை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக வலுவாக இழுப்பதன் காரணமாக இன்று கேரளா கர்நாடகா மகராஷ்டிரா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருவமழை மிக தீவிரமடையும். 

இன்று மற்றும் நாளை கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகும். கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோவை நீலகிரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று முதல் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மாஞ்சோலை கோதையாறு புளியரை செங்கோட்டை ஆகிய இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு.கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். அடுத்த 2 நாட்கள் பெய்யும் மழையால் தமிழக அணைகள் வேகமாக நிரம்பும் நிலையை எட்டும்.


தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைவதால் பாபநாசம் குற்றாலம் மூணாறு வால்பாறை ஊட்டி ஆகிய மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். 

Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

மிக தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

  • time: 2025-05-26

(Posted on 26-05-2025 ) மிக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை 

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


மத்திய மேற்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் ஈரப்பதத்தை கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கும் என்பதால் இன்று முதல் மழையின் அளவு படிப்படியாக தீவிரம் அடையும். 

கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி  கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும்.  குறிப்பாக கோவை நீலகிரி மாவட்டங்களில் பெருமழை பெய்யும். மேலும் திருப்பூர் தேனி மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. குமுளி தேக்கடி பெரியார் பகுதிகளில் மிக கனமழை பதிவாகும். 

பருவமழை தீவிரமடைய இருப்பதால் தென்காசி மூணாறு பொன்முடி ஊட்டி ஆகிய மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும். 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-24

(Posted on 24-05-2025 ) தென்மேற்கு பருவமழை இன்று துவங்குகிறது. தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு 

கொங்கன் கடலோர பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்கு பருவமழை ஆச்சர்ய தகவல்கள் : 

1901  முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடந்த 124 ஆண்டுகால இந்திய வரலாற்றில்  1918 ம் ஆண்டு மே 11 ம்தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. அதே போல வரலாற்றில் மிக தாமதமாக  1972 ம் ஆண்டு ஜூன் 18 ம்தேதியே பருவமழை துவங்கியுள்ளது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் வரலாற்றில் முன்கூட்டியே துவங்கிய 1918 ம் ஆண்டும் மிக தாமதமாக துவங்கிய 1972 ஆம் ஆண்டும் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக இருந்துள்ளது. 

மிக கனமழை எச்சரிக்கை 

இன்று கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆழப்புழா எர்ணாகுளம் திரிசூர் பாலக்காடு கண்ணூர் வயநாடு ஆகிய இடங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பதிவாக வாய்ப்புள்ளது. மேலும் திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பத்தனம்திட்டா இடுக்கி மாவட்டங்களிலும்  இன்று மிக கனமழை பதிவாகும். 

தமிழ்நாட்டினை பொறுத்தவரை கேரளாவை எல்லையாக கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைமாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை தென்காசி கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். குறிப்பாக கோதையாறு மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து புளியரை குற்றாலம் செங்கோட்டை மேக்கரை ஆகிய இடங்களில் மழை கொட்டி தீர்க்கும். 

மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. அவலாஞ்சி தேவாலா பந்தலூர் நடுவட்டம் ஆகிய இடங்களில் 200 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்பு.

-Tenkasi Weatherman.

 

weather-over-tamilnadu

துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

  • time: 2025-05-21

துவங்குகிறது தென்மேற்கு பருவமழை 

தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் மே 23 ம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து  மே 24 ம்தேதி கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்தவரை இன்று முதல் அடுத் 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக பகுதிகளான கன்னியாகுமரி  தென்காசி கோவை நீலகிரியிலும் சாரல் மழை பதிவாகும். 

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் மே 24  ம்தேதி முதல் கேரளா கர்நாடகா மகராஷ்டிரா கோவா ஆகிய மேற்கு கடலோர மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் . தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும்  மே 24 ம்தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக நீலகிரி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும். 

-Tenkasi Weatherman.