heavy-rainfall-alert

தீவிரமடைகிறது கோடைமழை

  • time: 2025-02-27

தூத்துக்குடியில் மழை அதிகரிக்கும். 

தெற்கு இலங்கை அருகே நீடிக்கும் காற்று சுழற்சியானது குமரி கடல் நோக்கி நகருவதால் இன்று இரவு முதல் தூத்துக்குடி நெல்லை கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும். 

இன்று பகல் நேரத்தை பொறுத்தவரை மாலை நேரங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகும். இன்று இரவு முதல் நாகப்பட்டினம் இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர பகுதிகளில் மழை துவங்கும். குறிப்பாக நாகப்பட்டினம் வேதாரண்யம் வேளாங்கண்ணி தரங்கம்பாடி கோடியக்கரை இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தேவிப்பட்டினம் தூத்துக்குடி ஆத்தூர் காயல்பட்டினம் திருச்செந்தூர் கல்லாமொழி குலசேகரன்பட்டினம் மணப்பாடு பெரியதாழை குட்டம் உவரி கூடன்குளம் ஆகிய இடங்களில் இன்று இரவு நாளை அதிகாலை நேரங்களில் பரவலாக மழை பெய்யும் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

நாளைய தினம்  நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பாபநாசம் மாஞ்சோலை மணிமுத்தாறு நெல்லை மாநகர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மதுரை மாவட்டங்களிலும் நாளை மழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

நெல்லை தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-02-26

நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

 

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள் .இந்த புனித நாளில் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறட்டும். 

தெற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

இன்று மாலை இரவு நேரங்களில் திருநெல்வேலி தென்காசி மாவட்டம் முழுவதும் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்யும். குறிப்பாக சிவகிரி வாசுதேவநல்லூர் புளியங்குடி கடையநல்லூர் தென்காசி குற்றாலம் செங்கோட்டை புளியரை பண்பொழி மேக்கரை ஆலங்குளம் விகேபுதூர் சுரண்டை மாறாந்தை பாவூர்சத்திரம் ஆம்பூர் பொட்டல் புதூர் கடையம் ஆழ்வார்குறிச்சி அம்பாசமுத்திரம் விகேபுரம் பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு காரையார் கல்லிடைகுறிச்சி சேரன்மகாதேவி முக்கூடல் பாப்பான்குளம் வீரவநல்லூர் களக்காடு திருக்குறுங்குடி வள்ளியூர் நாங்குநேரி மானூர் தேவர்குளம் கயத்தாறு  உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே இன்று மாலை நேரங்களில் கனமழை பெய்யும். 

குற்றால அருவிகளில் இன்று இரவு முதல் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களிலும் இன்று  மிக கனமழைக்கு வாய்ப்பு .
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கோதையாறு திங்கள்நகர் தக்கலை குழித்துறை மார்த்தாண்டம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. 

விருதுநகர் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மழை பெய்யும். .ஸ்ரீவில்லிபுத்தூர் இராமேஷ்வரம் பாம்பன் இராஜபாளையம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

 

நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு 

நெல்லை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்யும். குறிப்பாக பாளையங்கோட்டை சமாதானபுரம் ஹைகிரவுண்ட் வண்ணாரப்பேட்டை டவுண் மேலப்பாளையம் தச்சநல்லூர் சுத்தமல்லி ஆகிய இடங்களில் இன்று மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்யும்.

 

மகாசிவராத்திரியான இன்று தென் தமிழக மக்கள் கோவிலுக்கு செல்லும் போது கையில் குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் துவங்கும் மழை

  • time: 2025-02-25

புதிய காற்று சுழற்சி தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி நாளை இலங்கை அருகே நகர்ந்து அதன் பின்னர் இக்காற்று சுழற்சி குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று பிப்ரவரி 25 ம்தேதி  இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தென்காசி நெல்லை ஆகிய தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகும் .பிப்ரவரி 26 ம்தேதி நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகும்.குறிப்பாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழை எதிர்பாக்கலாம். 

பிப்ரவரி 27,28 தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

நாளை மறுநாள் பிப் 27  முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை சிவகங்கை தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். 

மார்ச் 1 - தென் மாவட்டங்களில் மழை தொடரும். குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 

Note : காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கோடைமழை துவங்குகிறது. இம்மழை பொதுவாக மாலை இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும். மேலும் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. 

விவசாயிகளுக்கான எச்சரிக்கை 

நமது வானிலை பக்கத்தின் சார்பில் தென் தமிழக மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தென் தமிழகத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தங்கள் விவசாய பணிகளை இன்றைக்குள் முடிக்கவும்.

இந்த மழையானது விவசாயிகளுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விவசாயிகள் அறுவடைப்பணிகளை துரிதப்படுத்தவும்.மேலும் அறுவடை செய்த மக்காளச்சோளம்  நெல்  உள்ளிட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-02-21

தாகத்தை தீர்க்க வரும் கோடைமழை 

தமிழ்நாட்டில் குளிர்காலம் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் கோடைகாலம் துவங்க உள்ளது. மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலம் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் .மாநிலத்தில் எங்குமே மழைக்கான வாய்ப்பு இல்லை.

தற்போதைய நிலையில் தமிழகத்தை விட கேரளா மாநிலத்தில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. ஈரப்பதம் இல்லாத வறண்ட கிழக்கு திசை காற்று வீசும் என்பதால் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி தென்காசி தேனி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். 

தமிழகத்தின் உள்மாவட்டங்களான விருதுநகர் மதுரை திருச்சி கரூர் நாமக்கல் வேலூர் திருப்பத்தூர் சேலம் ஆகிய இடங்களிலும் வெயில் அதிகரித்தே காணப்படும். இந்த கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் மழையும் அதிகரித்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்தாண்டு கோடைமழை அதிகளவு பெய்யும்.கன்னியாகுமரி தென்காசி நெல்லை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்லமழை பெய்யும். இந்தாண்டு கோடைமழை நல்ல அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மா விளைச்சல் அதிகரிக்கும். மிக விரைவாக மாங்காய் பழுப்பதற்கும் இந்த மழை உதவும்

இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி இம்மாத இறுதியில்  தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.   

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் தொடர்மழைக்கு வாய்ப்பு

  • time: 2025-01-17

தென் மாவட்டங்களில் தொடர்மழைக்கு வாய்ப்பு 

மழை குறித்து திருக்குறள் :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : மழை பெய்வதால் தான் உலக உயிர்கள் வாழ்கின்றன என்பதால், மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கது. உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

 

கிழக்கத்திய அலையானது (Easterly Trough) இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் நோக்கி நகருகிறது. இதனால் ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று வலுவாக தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை இரவு முதல் ( ஜன 18) மழை துவங்கும். 


ஜனவரி 19 ம்தேதியை பொறுத்தவரை சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மயிலாடுதுறை தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும்.குறிப்பாக காவிரி  டெல்டா  மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கை

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று தென் மாவட்டங்களில் குவியும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு முதல் தென் கடலோர  மாவட்டங்களில் மழை துவங்கும். குறிப்பாக ஜனவரி 19  ம்தேதி இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். 

Tenkasi Weatherman Special Forecast நெல்லையில் பெருமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தென் தமிழக மலைகளின் மீது மோதும் என்பதால் மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் பெருமழைக்கு வாய்ப்பு. ஒரே நாளில் 300 மிமீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே மாஞ்சோலை பகுதியை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

வடகிழக்கு பருவமழை விலக சாத்தியமில்லை:

 1971 முதல் 2024 வரையிலான காலத்தில்  1994 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம்தேதி வடகிழக்கு பருவமழை மிக வேகமாக முன்கூட்டியே விலகியுள்ளது. அதே போல கடந்த 55 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தாமதமாக விலகிய ஆண்டு 2021. 2021 ம் ஆண்டு வரலாற்றில் மிக தாமதமாக ஜனவரி 19ம் தேதி  பருவமழை விலகியுள்ளது. 
தற்போது அதை முறியடித்து மேலும் தாமதமாக பருவமழை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்வதால் வானிலையை கண்காணிக்கும் பணி சற்று அதிகரித்துள்ளது. பொங்கல் நாளிலும் வானிலை சேவைகள் தொடர்கிறது. 
வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ள www.tenkasiweatherman.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

-Tenkasi Weatherman 

heavy-rainfall-alert

பொங்கலன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-01-13

பொங்கல் வாழ்த்தும் தமிழக வானிலை அறிவிப்பும் :

தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

 தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் "தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே" என்று நற்றிணை 80 மற்றும் 124ஆம் பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற குறுந்தொகையின் 196வது பாடலிலும், "தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று புறநானூறின் 70வது பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறின் 84 வைத்து பாடலிலும், “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகை பாடலிலும் சங்க காலம் தொட்டே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக சங்க கால தமிழ் இலக்கிய வரலாற்று குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

 

அறுவடைத் திருநாள், உழவர்கள் இயற்கைக்கு படையலிடும் விழா என்றும், சூரியனை வழிபடும் விழா என்றும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் பண்டிகை மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது. 
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்.கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும் 

தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை -தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  (14-01-2025)(Tenkasi Weatherman Forecast )

பொங்கள் நன்னாளில் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.  குமரி கடல் அருகே நீடிக்கும் காற்று காரணமாக ஈரப்பதம் மிக்க காற்று தென் தமிழகம் ஊடாக வீசுவதால் நாளை (ஜன 14) நெல்லை தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நாளை மழை பெய்யும். குறிப்பாக திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு கனமழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு. 

15-01-2025 (Tenkasi Weatherman Forecast )மாட்டு பொங்கலன்றும் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டத்தில் பரவலான  மழைக்கு வாய்ப்பு . பொங்கல் விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ள பகுதிகளில் மாலை இரவு நேர நிகழ்ச்சிகளை மழைக்கேற்றவாறு நடத்தி கொள்ளவும். முக்கியமாக கோலப்போட்டி நடத்த வேண்டாம். 
தென் மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரிய அளவுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை.

பொங்கலன்று இதற்கு முன்பு தென் தமிழகம் மழை பெற்றுள்ளதா?

1991 முதல் 2025 வரையிலான 35 வருட காலத்தில் பொங்கல் திருநாளன்று தென் மாவட்டங்கள் மழை பெறுவது அரிதாக இருந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் 2006,2010,2021 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டுமே நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்கள் பொங்கலன்று மழையை பெற்றிருக்கிறது.  2021 ம் ஆண்டுக்கு பிறகு தற்போதும் பொங்கலன்று நாம் மழையை பெற உள்ளோம். 

தென் தமிழக மக்களே மழையோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடவும். 

-Tenkasi Weatherman.